உளுந்து, பச்சைப்பயறு, துவரை ஆகிய பருப்புவகைகளை விவசாயிகளிடமிருந்து அரசு நேரடியாக கொள்முதல் செய்யும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2018-19ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சரும் துணை முதல்வருமான பன்னீர்செல்வம் தாக்கல் செய்துவருகிறார்.

இந்த பட்ஜெட்டில், விவசாயத்துக்கான முக்கிய அறிவிப்புகள்:

* 2018-19ம் நிதியாண்டில் 10 லட்சம் ஹெக்டேரில் திருந்திய நெல் சாகுபடி முறை நடைமுறைப்படுத்தப்படும்.

* நெல் உற்பத்திக்கான ஊக்கத் தொகை வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* குடிமராமத்து திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு

* வரும் நிதியாண்டில் ரூ.250 கோடி செலவில் புதிய தடுப்பணைகள் கட்டப்படும்.

* விவசாயிகளின் வருவாயை பெருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.

* நுண்ணீர் பாசனத்தை மேம்படுத்த ரூ.715 கோடி ஒதுக்கீடு.

* அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் திட்டத்துக்கு ரூ.1,789 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த அனுமதி வழங்கப்படும்.

* அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* சென்னை கிண்டியில் ரூ.20 கோடியில் அம்மா பசுமைப் பூங்கா தொடங்கப்படும்.

* விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் ”உழவன்” என்ற அலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும்.

* கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.8000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும்.
 
250 கோடி ரூபாய் செலவில் புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது விவசாயிகளிடையேயும் தமிழக மக்களிடையேயும் வரவேற்பை பெற்றுள்ளது. 

எதிர்க்கட்சிகள், விவசாயிகள் மற்றும் தமிழக மக்களின் நீண்டகால விமர்சனமாக இருப்பது தமிழகத்தில் புதிய தடுப்பணைகள் கட்டப்படவில்லை என்பதுதான். அண்டை மாநிலங்கள் எல்லாம் தடுப்பணைகளை கட்டி நீரை சேமித்துவரும் நிலையில், தமிழக அரசு மட்டும் புதிய தடுப்பணைகளை கட்ட முயற்சிகளை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. அதை உடைக்கும் வகையில், 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என பட்ஜெட்டில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.