தமிழகத்தில் 500 புதிய பேருந்துகளில் முதலமைச்சர் பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார். இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமைச் செயலாளர், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

தமிழகத்தில் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 5000 புதிய பேருந்துகளை வாங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக 515 நவீன பேருந்துகளின் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. அடுத்தடுத்து பல்வேறு மாவட்டங்களுக்கும் புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரூ.133 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகரத்திற்கு புதிய மாநகர பேருந்துகள், சிறிய பேருந்துகள் மற்றும் ஏசி வசதியுடன் கூடிய பேருந்துகள் என 500 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். 

இன்று தொடங்கி வைக்கப்பட்ட பேருந்துகளின் முக்கிய அம்சமாக சென்னையில் இருந்து வேலூர் மற்றும் திருவண்ணாமலைக்கு குளிர்சாதனப் பேருந்துகள் அறிமுகப்படுத்திவைக்கப்பட்டன. தலைமைச் செயலகத்தில் இருந்து கோயம்பேட்டுக்குச் செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்கும், வேலூருக்கும் செல்லும் முதல் பயணத்தில் மட்டும் கட்டணம் இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

வழக்கமாக குளிர்சாதனப் பேருந்துகளில் இரு புறமும் இரண்டிரண்டு இருக்கை வரிசைகளுக்குப் பதில் இந்தப் பேருந்துகளில் வழக்கமான அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் போன்று ஒருபுறம் 3 இருக்கை வரிசையும் மறுபுறம் 2 இருக்கை வரிசையும் இடம்பெற்றுள்ளன. புஷ்பேக் சீட், அறிவிப்புகளுக்காக மைக் மற்றும் 6 ஸ்பீக்கர்கள், பயணிகள் வசதிக்கு ஏற்ப குளிர்சாதனவசதியை மாற்றியமைக்க வசதி, எல்.இ.டி. விளக்கு உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. மேலும் அனைத்து இருக்கைகளிலும் செல்ஃபோன் சார்ஜர் வசதி கொண்டுள்ளன. 

சென்னைக்கு 8 பேருந்துகளும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டத்துக்கு 198 பேருந்துகளும், சேலம் கோட்டத்துக்கு 134 பேருந்துகளும், கும்பகோணம் கோட்டத்துக்கு 160 பேருந்துகளும் என மொத்தம் 500 புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டன.