அண்ணா அறிவாலயம் தி.மு.கவின் தலைமை அலுவலகமாகச் செயல்பட்டு வருகிறது. இது கடந்த 1987 ஆம் ஆண்டு கருணாநிதியால்  திறக்கப்பட்டது. இந்தக் கட்டடம் தி.மு.க-வின் வளர்ச்சியின் பல்வேறு படிநிலைகளை சுமந்து நிற்கிறது. 

இந்தநிலையில், கட்சியினரின் வசதிக்காக காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே புதிய கட்சி அலுவலகத்துக்கான இடம் திராவிட முன்னேற்றக் கழகம் டிரஸ்ட் என்ற பெயரில் வாங்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. 

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் கடம்பாடி மற்றும் பெருமாளேரி என்ற கிராமங்கள் இருக்கின்றன. கடம்பாடியில் 2 ஏக்கர் 39 சென்ட் மற்றும் பெருமாளேரியில் 9 ஏக்கர் 90 சென்ட் என மொத்தம் 12 ஏக்கர் 29 சென்ட் இடம் `திராவிட முன்னேற்றக் கழகம் டிரஸ்ட்’ பெயரில் வாங்கப்பட்டிருக்கிறது. 

அறக்கட்டளையின் தலைவர் என்கிற முறையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்து அந்த இடங்களுக்கான பத்திரப்பதிவு வேலைகளை நேற்று  மேற்கொண்டார்,

இந்த இடத்தில் கட்சியின் புதிய அலுவலகத்தைக் கட்ட தலைமை திட்டமிட்டிருக்கிறது. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், பொதுக்குழு, செயற்குழு என கட்சி நிகழ்ச்சிகளை இங்கேயே நடத்தவும் தலைமை முடிவு செய்திருக்கிறது. 

அண்ணா அறிவாலயத்தில் தேசியத் தலைவர்கள் மற்றும் மாநிலக் கட்சிகளின் தலைவர்களைச் சந்திக்கும் நிகழ்வுகளை மட்டுமே நடத்திக் கொள்ளத் திட்டமிடப்பட்டிருக்கிறது. கட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் அண்ணா அறிவாலயத்தில் நடத்துகையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்னைகளைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. 

புதிதாகக் கட்சி அலுவலகம் அமைய இருக்கும் இடம், கிழக்குக் கடற்கரை சாலை மற்றும் ஜி.எஸ்.டி சாலை ஆகியவற்றுக்கு அருகில் அமைந்திருப்பதால் தொண்டர்கள் வந்து செல்வதற்கும் வசதியாக இருக்கும். இரண்டு ஆண்டுகளில் இந்தப் பணி நிறைவடையும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.