நாடாளுமன்ற தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் முக்கியமானது. ஏனெனில் இம்மாநிலத்தில் தான் நாட்டிலேயே அதிகபட்சமாக 80 தொகுதிகள் உள்ளன. 

கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இங்குள்ள 80 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 71 இடங்கள் கிடைத்தன. அதுவே அக்கூட்டணி ஆட்சி அமைக்க பேருதவிகளில் ஒன்றாக அமைந்தது. இம்முறை பாஜகவை தோற்கடிக்கும் முனைப்போடு, உத்தரப்பிரதேச அரசியலில் எதிரெதிர் அணியில் இருந்த அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. 

காங்கிரஸ் தனித்து விடப்பட்டது. எனினும் ராகுல் காந்தி, சோனியா காந்தி போட்டியிடும் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் போட்டி வேட்பாளர்களை அறிவிக்க மாட்டோம் என அக்கட்சிகள் அறிவித்தன. வலுவான கூட்டணி என்பதால் இம்முறை உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணியே அதிக இடங்களைப் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் வலுவான போட்டியை சமாளித்து அங்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே 48 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 

சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணி 29 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங். கூட்டணி 3 இடங்களில் முன்னிலை பெற்றிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் போட்டியிடும் நட்சத்திரத் தலைவர்கள் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் அமேதி தொகுதியிலும் சோனியா காந்தி ரேபரேலி தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றனர்.