வன்முறைக்கு காரணமே கே.எஸ் அழகிரி தான்..! தலைவர் பதவியில் இருந்து நீக்கிடுங்க..! காங்கிரஸ் நிர்வாகி போர்கொடி
காங்கிரஸ் அலுவலகத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு காரணமே மாநில தலைவர் கே.எஸ்.அழகிரிதான் என தெரிவித்த நெல்லை மாவட்ட துணை தலைவர் சந்திரசேகர், தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
காங்கிரஸ் அலுவலகத்தில் மோதல்
காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் கடந்த 15ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து இந்த பிரச்சனைக்கு காரணமான சட்ட மன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.
கே.எஸ். அழகிரியை நீக்க வேண்டும்
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 15ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றிருந்தபோது கலவரம் ஏற்பட்டது. இதற்கு முழு முதல் காரணம் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தான். இந்தக் கலவரத்திற்கு முக்கிய காரணமே கே எஸ் அழகிரி தான். தொண்டர்களை அவர் தாக்கியதால் அதனைப் பார்த்த மற்ற நிர்வாகிகள் கோவப்பட்டதாகவும் இதன் காரணமாகவே அந்த பகுதியில் கலவரம் ஏற்பட்டதாக கூறினார்.
இதனையடுத்து தங்கள் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும், அந்த இடத்தில் இருந்து வெளியேறுவதே மிகவும் சிரமமான நிலை தான் உருவானதாகவும் குறிப்பிட்டார். எனவே இதன் காரணமாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டவர். இதே போல மாவட்ட தலைவர் ஜெயக்குமாரையும் நீக்க வேண்டுமென சந்திரசேகர் வலியுறுத்தினார்.
இதையும் படியுங்கள்
தாவல் திலகம் குஷ்புவுக்கு நாவடக்கம் தேவை..! கடுமையாக விமர்சித்த முரசொலி