நன்றி மறந்த காங்கிரஸ்... கண்ணீர் வடித்த நெல்லை கண்ணன்.. இனி தமிழகம் ஸ்டாலின் பின்னால் தான்..
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 2021ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் அம்பேத்கர் சுடர் விருது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் , பெரியார் ஒளி விருது மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கும், காமராசர் கதிர் விருது நெல்லை கண்ணன்-க்கும், அயோத்திதாசர் ஆதவன் விருது காரியமாலுக்கும், காயிதே மில்லத் பிறை விருது பஷீர் அகமது-க்கும், செம்மொழி ஞாயிறு விருது ராமசாமிக்கும் வழங்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இந்திய அரசியலமைப்பு சட்ட கோட்பாடுகள் குறித்து அம்பேத்கர் கையால் எழுதிய படிவத்தை திருமாவளவன் வழங்கினார். அதோடு புத்தர் சிலையையும், 50 ஆயிரம் ரொக்கமும் திருமாவளவன் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘என்னை தேர்ந்தெடுத்து அம்பேத்கர் விருதை பெற்றுக்கொள்ள வேண்டும் என திருமா தெரிவித்தார் .
அவருடைய அன்புக்கு நான் என்றுமே கட்டுப்பட்டவன் தான். எனக்கு இவ்விருதினை தருகிறேன் என்று சொன்னபோது எனக்கு அச்சமிருந்தது . அம்பேத்கரின் விருதினை பெரும் அளவிற்கு நான் சாதனை செய்யவில்லை, கடமையை தான் செய்தேன் மாநில ஆதிதிராவிட ஆணையம், பஞ்சமி நிலம் மீட்பு , அயோத்திதாசர் மணிமண்டபம் என பலவற்றை செய்தாலும் அவற்றை எல்லாம் செய்ய தான் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது.
சட்டமன்றத்தில் எனக்கென்று சாதி பெருமை கிடையாது. எனக்கு விருது வழங்கி, இச்சமூகத்திற்கு செய்ய ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ளீர்கள். கலைஞர் வழி வந்தவன் நான் அவரின் மகன் என்பதில் பெருமைக்கொள்பவன். முதன்முறையாக முதல்வராக கலைஞர் பதவியேற்றபோது ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கென தனித்தனி துறையை உருவாக்கினார். அம்பேத்கர் பெயரிலான விருதினை பெரியார் திடலில் வைத்து வாங்குவதில் உள்ள பெருமையை தவிர வேற என்ன வேண்டும்.
மராட்டியத்தை விட அம்பேத்கர் புகழை தமிழகத்தில் பரப்பியது திராவிட இயக்கம் தான். நான் முதல்வராக பதவியேற்றவுடன் ஒரு கூட்டத்தை கூட்டினேன்,அமைச்சர்கள், அதிகாரிகளுடான கூட்டத்தில் பேசினேன். வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விரைந்து முடிக்கவேண்டும். இவற்றிற்கு மேலும் 4 கூடுதல் நீதிமன்றங்கள். வன்கொடுமை நடக்ககூடாது என்பது எங்கள் தான் கொள்கை.
சட்டத்தினால் அனைத்தையும் திருத்திவிட முடியாது மனமாற்றம் தேவை. மனமாற்றம் தேவை என்று விட்டுவிடக்கூடாது சட்டங்கள் அதற்கு தேவை. சீர்திருத்தபரப்புகளை நடத்திட வேண்டும். சமூக நல்லிணக்கம் இல்லாத மாநிலத்தில் மற்ற முயற்சிகள் எல்லாம் வீண் தான். சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கவேண்டும் இல்லையென்றால் அவற்றை புறம் தள்ளவேண்டும் என தொழிலதிபவர்கள் மாநாட்டில் சொன்னேன்” எனக் கூறினார்.
அடுத்து பேசிய நெல்லை கண்ணன், ‘திருமாவின் மடியில் மறைந்தால் அதுதான் எனக்கு பெருமை.அந்த பெருமை கிடைத்தால் போதும்.அதுதான் எனது பாக்கியம்.என் பொது வாழ்க்கையில் எனக்கு இப்படி ஒரு விருது கொடுத்து என்னை இதுவரை யாரும் கௌவரப்படுத்தியது இல்லை. முதல்வரிடம் கைகூப்பி கேட்கிறேன்.முதல்வரிடமும்,திருமாவிடமும் நான் கேட்டுக்கொள்வது உடல்நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள்.இந்த தலைமுறைக்கு உங்களை விட்டால் வேறு யாறும் இல்லை. வட மாவட்டத்திற்கு தலைவன் திருமா தான்.தமிழ்த்தாயை தெய்வமே வணங்குகிறது. இதை மறைக்கிறார்கள்.காங்கிரஸ் கட்சிக்காக என் வாழ்க்கையை இழந்தேன், காங்கிரஸ் கட்சி எனக்கு ஒன்றுமே செய்யவில்லை .
இரண்டாம் விடுதலை போரில் வெற்றி பெற்றவர் நீங்கள் தான் திருமா. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று நீங்கள் பொறுப்பு ஏற்கும் போது, உங்களது மனைவி (துர்கா ஸ்டாலின்) கண்ணீர் வடித்தார்கள்.நானும் கண்ணீர் வடித்தேன்.திருமா சிறுத்தை என்று சொல்கிறார்கள். ஆனால் சிறுத்தைகளுக்கு தலைமை தாங்கும் ஒரே சிங்கம் திருமா தான்’ என்று தனது பேச்சு முழுக்க கண்ணீர் வடித்த நெல்லை கண்ணனின் பேச்சு சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.