பிரதமர் மோடியை அவதூறாகப் பேசியதாக நெல்லை கண்ணனை போலீஸார் கைது செய்துள்ளனர்.


குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நெல்லையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நடந்த எதிர்ப்புக் கூட்டத்தில் நெல்லை கண்ணன் பங்கேற்று பேசினார். அப்போது, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மிகக் கடுமையாக விமர்சித்து பேசிய நெல்லை கண்ணன், “அவுங்க ஜோலியை முடிச்சுடுவீங்க’ என்றும் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. நெல்லை கண்ணன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர், அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
நெல்லை கண்ணன் மீது பாஜகவினர் அளித்த புகாரின்பேரில் அவர் மீது காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட நெல்லை கண்ணன், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்குப் பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல், நெல்லை கண்ணனைக் கைது செய்யவேண்டும் என்று ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில் நெல்லை கண்ணனை செய்யாவிட்டால், சென்னை மெரினாவில் தர்ணா நடத்தப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா எச்சரித்திருந்தார். இதன்படி பாஜக தலைவர்களும் தொண்டர்களும் இன்று போராட்டம் நடத்தினர். மெரினாவில் போராட்டம் நடத்தவந்த பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் அடுத்த கட்ட போராட்டம் பற்றி நாளை அறிவிக்கப்படும் என்று பாஜக  தலைவர்கள் எச்சரித்திருந்தனர். 
இந்நிலையில் நெல்லை கண்ணனை நெல்லை போலீஸார் இன்று இரவு கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு விடுதியில் தங்கியிருந்த நெல்லை கண்ணனை போலீஸார் கைது செய்தனர். குற்றம் செய்ய தூண்டுதல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.