Asianet News Tamil

எங்களைப் பற்றி எப்படி அப்படி சொல்லலாம்.. அரசியல் நாகரீகம் இல்லமா பேசாதீங்க முதல்வரே.. சுடான பதிலடி கொடுத்த EPS

திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்துவிட்டதைப்போன்று, ஸ்டாலின் வானத்திற்கும், பூமிக்கும் குதித்து அறிக்கை வெளியிட்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

NEET Exam Issue...Edappadi Palanisamy slams CM Stalin
Author
Tamil Nadu, First Published Jul 15, 2021, 1:56 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

அரசியல் நாகரிகம் இன்றி முதலமைச்சர் பதவிக்கான தகுதியை உணராமல் அறிக்கை என்ற பெயரில் ஸ்டாலின் நஞ்சை கக்கியிருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- திமுக தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து என்று வெற்று முழக்கமிட்டு, மக்களை திசை திருப்பி வெற்றி பெற்றது என்றும்,  சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் மீது பேசும்போதுகூட, நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டுமா? வேண்டாமா என்று தான் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் நேரடியாக எந்த பதிலும் தரவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

2010ம் ஆண்டு நீட் தேர்வு குறித்து அன்றைய காங்கிரஸ் அரசு அறிவித்தபோது, காங்கிரஸின்  குலாம் நபி ஆசாத் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும்  திமுகவின் காந்திசெல்வன் இணை அமைச்சராகவும் இருந்தனர் என்று குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி,  2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தது முதல் 2016ம் ஆண்டு வரை ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற்று தந்ததாகவும் கூறியுள்ளார்.

தான் முதலமைச்சராக இருந்தபோது நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதியன்று சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேறி மத்திய அரசுக்கு அனுப்பியதாகவும் , ஆனால் மத்திய அரசு அதற்கான ஒப்புதலை வழங்கவில்லை என்றும் கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி,  நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி ஆராய மட்டுமே நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு, நீட் தேர்வை ரத்து செய்ய அமைக்கப்பட்டதாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது, நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இந்த குழு நீட் தேர்வை ரத்து செய்யப்பட்டதற்காக அமைக்கப்பட்டது என எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால்,  திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்துவிட்டதைப்போன்று, ஸ்டாலின் வானத்திற்கும், பூமிக்கும் குதித்து அறிக்கை வெளியிட்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் நீட்தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றும், அதற்கான வழி எங்களுக்கு தெரியும் என்றும் வாய்வீரம் காட்டிய ஸ்டாலின், தன்னுடைய இயலாமையை மறைப்பதற்காக தன் மீது பழி சுமத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அவர், அரசியல் நாகரிகம் இன்றி முதலமைச்சர் பதவிக்கான தகுதியை உணராமல் அறிக்கை என்ற பெயரில் ஸ்டாலின் நஞ்சை கக்கியிருப்பதாகவும் காட்டமாக தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு முதல், தமிழகத்தை பாதிக்கும் எந்த பிரச்சனையாக இருந்தாலும், ஒவ்வொரு அடியையும் மிகவும் எச்சரிக்கையுடன் எடுத்து வைத்து அதிமுக செயல்பட்டதாகக் கூறியுள்ளார். மேலும், “எங்களைப் பார்த்து "பாதம் தாங்கிகள் " எதிர்கட்சியான பிறகும் பி.ஜே.பி-யின் அடிமைகள்’’ என்றெல்லாம் அரசியல் நாகரீகம் இன்றி, தான் வகிக்கும் முதல்வர் பதவிக்கான தகுதியை உணராமல், அறிக்கை என்ற பெயரில் நஞ்சை கக்கி இருக்கிறார். 1999-2004 காலக்கட்டத்தில் மத்திய பாஜக அரசில் பங்குகொண்டு, 5 ஆண்டுகள் பதவி சுகம் அனுபவித்து, 2001-ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் பிஜேபி-க்கு 26 இடங்களை அள்ளி வழங்கி குலாவிய போதும், இவர்கள் எதைத் தாங்கிக்கொண்டிருந்தார்கள் என்று திருப்பிக் கேட்க எங்களுக்கு ஒரு நிமிடம் ஆகாது. ஆனால், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் வளர்க்கப்பட்ட நாங்கள், அநாகரீகமாக நடந்துகொள்ள மாட்டோம்” என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் பேச்சை நம்பி நீட் ஒழிந்து விடும் என்று தேர்விற்கு தயாராகாத மாணவர்கள் மத்தியில், நீட் தேர்வு தேதி அறிவிப்பு தலையில் இடியை போல் இறங்கியுள்ளதாக கூறியுள்ள அவர்,  நீட் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது, மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் மன உளைச்சல் ஏற்படாமல் இருக்கவே, நீட் தேர்விற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்ற அரிய விஞ்ஞான கண்டுபிடிப்பை சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளதாகவும்  விமர்சித்துள்ளார்.

2019ல் மருத்துவம் பயில அரசு பள்ளிகளில் பயின்ற 6 மாணவர்கள் மட்டுமே தேர்வான நிலையில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டமாகி, அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை முதலமைச்சராக இருந்தபோது தான் நினைவாக்கியதாக கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி,  இதன் மூலம் 2020ம் ஆண்டில் அரசு பள்ளிகளில் படித்த 435 மாணவர்கள் மருத்துவ படிக்கும் வாய்ப்பை பெற்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும், 17 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி,  திமுக ஆட்சியாளர்கள் நீட் சம்பந்தமாக தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios