கடந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நீட் தேர்வு மையங்களை கேரளா, கர்நாடகா, மாராஷ்ட்ரா என பல்வேறு மாநிங்களில் சிபிஎஸ்இ ஒதுக்கி இருந்தது. இதனால் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத மிகவும் சிரமப்பட்டனர்.

இந்நிலையில் இந்த கல்வி ஆண்டில் தமிழக மாணவர்கள் நீட் தேர்வுகளை தமிழகத்திலேயே எழுதலாம் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

நெல்லையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.   பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, தமிழகத்தில் நீட் தேர்வு எழுத மத்திய அரசு கேட்ட உள்கட்டமைப்பு வசதியுடன் இந்தாண்டு 550 மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக கூறினார்.

இதனால் தமிழகத்தில் உள்ள ஒரு மாணவ மாணவியர் கூட, வெளிமாநிலம் சென்று நீட் தேர்வு எழுதும் நிலை வராது என உறுதியாக கூறினார்.

 ‘நீட்’ தேர்வுக்காக 16 ஆயிரம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் மிகச்சிறந்த 4 ஆயிரம் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி தமிழகத்தில் உள்ள 10 கல்லூரிகளில் நடைபெறும். பொதுத்தேர்வு முடிந்தவுடன் பயிற்சி நடக்கும். 

இதே போல் வரும் கல்வியாண்டு முதல் +2 முடித்த அனைவருக்கும் நிச்சயம் வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆண்டுதோறும் 15 லட்சம் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இனி வரும் ஆண்டுகளில் 8, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தோம். அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே விரைவில் அவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என செங்கோட்டையன் அதிரடியாக தெரிவித்தார்..