நீட் விலக்கு தொடர்பாக இன்று நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. நீட் விலக்கிற்காக ஏற்கனவே நடந்த கூட்டத்தில் அதிமுக பங்கேற்ற நிலையில் தற்போதைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் விலக்கு தொடர்பாக இன்று நடக்கும் சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுகவின் தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வை ரத்து செய்ய சட்டப்பேரவை முதல்கூட்டத்திலேயே மசோதா நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி, திமுக வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பான மசோதா கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அன்றே குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெறுவதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், 6 மாதங்கள் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் பிப்ரவரி 1-ம் தேதி நீட் மசோதாவை தமிழக சட்டப்பேரவை தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். நீட் மசோதா, கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக இருப்பதாகவும், மேலும் பல்வேறு காரணங்களையும் குறிப்பிட்டு, அந்த மசோதாவை மறுபரிசீலனை செய்யும்படி தெரிவித்திருந்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருவதுடன், மத்திய அரசு ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று கூறிவருகின்றனர். 

இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை ஆளுநர் நிராகரித்ததையடுத்து அடுத்த நடவடிக்கை குறித்து விவாதித்து முடிவு எடுப்பதற்காக, சட்டப்பேரவை அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. 

இந்நிலையில், நீட் விலக்கு தொடர்பாக இன்று நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. நீட் விலக்கிற்காக ஏற்கனவே நடந்த கூட்டத்தில் அதிமுக பங்கேற்ற நிலையில் தற்போதைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாஜக பங்கேற்காது என அறிவித்த நிலையில் அதிமுகவும் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.