திமுக தயாநிதி மாறன்  ‘நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களா’ என்று பேசியது தொடர்பாக தேசிய எஸ்.சி. ஆணையம் தமிழக அரசிடம் விளக்கம் கோரியுள்ளது. 
‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம் மக்களிடம் பெறப்பட்ட மனுக்களை திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி ஆகியோர் தலைமை செயலாளர் சண்முகத்தைச் சந்தித்து வழங்கினார்கள். இந்தச் சந்திப்பின் போது தமிழக தலைமைச் செயலாளர் எங்களை அவமானப்படுத்தும்விதமாக நடந்துகொண்டார் என்று திமுக எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர். அவருடைய அறையில் தொலைக்காட்சி பெட்டியின் சத்தத்தை அலறவிட்டு சத்தத்தை கூட குறைக்க விடாமல் எங்களை அவமானப்படுத்தினார் என்று டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் குற்றம் சாட்டினர்.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் தயாநிதி மாறன் பேசுகையில், “எங்களை மூன்றாம் தரம் மக்களை போல நடத்தினார். நாங்கள் எல்லாம் என்ன தாழ்த்தப்பட்டவர்களா?” என்று தயாநிதி மாறன் தெரிவித்தார். தயாநிதியின் இந்த பேச்சு சர்ச்சையானது. இதனையடுத்து இதுகுறித்து விளக்கம் அளித்த தயாநிதி மாறன், “எங்களை தாழ்வாக நடத்தியதால் அவ்வாறு கூறினேன். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை” என்று தெரிவித்தார். ஆனால், இந்த விவகாரத்தை அதிமுகவைவிட பாஜக கையில் எடுத்தது. தயாநிதி மாறனுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள காவல் நிலையங்களில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்தனர். மேலும் தயாநிதியை கட்சியை விட்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விலக்க வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்திவருகிறது.


இந்நிலையில் தயாநிதி மாறன் பேசியது குறித்து தேசிய எஸ்.சி. ஆணையம், தமிழக தலைமைச் செயலாளர், தமிழக காவல் துறை தலைவர், சென்னை மாநகர ஆணையர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், ‘ தயாநிதி மாறன் பேசியது தொடர்பாக மீடியாக்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் பெறப்பட்ட புகாரை விசாரிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்களை நோட்டீஸ் பெறப்பட்ட 7 நாட்களுக்குள் அனுப்பி வைக்கும்படி’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.