நடைபெற உள்ள இடைத்தேர்தலில் நான்கு தொகுதிகளையும் கைப்பற்றியே ஆக வேண்டும் என்பதால் ’வலுவான’ வேட்பாளர்களை களமிறக்கத் திட்டமிட்டுள்ளது அதிமுக தலைமை. 

அடுத்த மாதம் 19ம் தேதி 4 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து விட்டு தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் நாளை விருப்ப மனு தாக்கல் செய்ய அதிமுக அறிவித்துள்ளது. 

அதிமுக, திமுக ஆகிய இருகட்சிகளுமே திருப்பரங்குன்றம் தொகுதியை முக்கியமாக கருதுகின்றன. ஆக அங்கு திமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணன் பசையுள்ள பார்ட்டி என்பதால் பணத்தை வாரி வழங்கி வெற்றிபெற்று விடவேண்டும் என திட்டமிட்டுள்ளார். இந்தத் தொகுதியில் தான் சார்ந்த முக்குலத்தோர் வாக்குவங்கியும் கைகொடுக்கும் எனவும் அவர் எதிர்பார்க்கிறார். 

இதனால் அவரை எதிர்த்து வலுவான வேட்பாளரை களமிறக்க அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது. அங்கு சரவணனுக்கு டஃப் கொடுக்க முக்குலத்தோர் வகுப்பை சேந்தவரும், பொருளாதாரத்தில் அசைக்க முடியாதவராகவும் உள்ள முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை களமிறக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. அதிமுகவுக்கு அதிகம் ஆதரவு உள்ள தொகுதி. 2016 சட்டசபை தேர்தலின்போது, நத்தம் விஸ்வநாதன், தனது தொகுதியான நத்தம் தொகுதியில், போட்டியிட ஜெயலலிதாவிடம் கேட்டிருந்தார். நத்தம் கொடுக்கப்படாததால் திருப்பரங்குன்றத்தை கேட்டிருந்தார். ஆனால், இரு தொகுதிகளையும் கொடுக்காத ஜெயலலிதா ஆத்தூர் தொகுதியை நத்தன் விஸ்வநாதனுக்கு ஒதுக்கினார். 

அங்கு திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமிடம் போட்டியிட்டு நத்தம் விஸ்வநாதன் தோல்வியடைந்தார். அதன்பிறகு அரசியலில் நத்தம் விஸ்வநாதன் ஆர்வம் காட்டவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் அணியில் இணைந்த அவர், தற்பொழுது ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரிடமும் நெருக்கம் காட்டி வருகிறார். ஆகையால் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட நத்தம் விஸ்வநாதனுக்கு அதிமுக சீட் கொடுக்கும் என அதிமுகவில் பேசப்படுகிறது.