ஓபிஎஸ்-வைத்தியலிங்கம் இடையே கருத்து வேறுபாடு..! புதிய குண்டை தூக்கிப் போட்ட நத்தம் விஸ்வநாதன்
ஜூலை 11 ஆம் தேதி திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் எனவும், இந்த கூட்டத்தில் அனைத்து அதிகாரங்களும் படைத்த பொறுப்பாக பொதுச் செயலாளர் பொறுப்பு உருவாக்கப்பட்டு,எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.
ஓபிஎஸ்- வைத்தியலிங்கம் மோதல்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஓபிஎஸ்- இபிஎஸ் என இரண்டு பிளவாக அதிமுக பிரிந்து உள்ளது. ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்கழு கூட்டம் செல்லாது என ஓபிஎஸ் தரப்பும், பொதுக்குழு கூட்டம் செல்லும் என இபிஎஸ் தரப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், பொதுக்குழு கூட்டம் நடத்த இபிஎஸ் தரப்பு தீவிரமாக பணியாற்றி வருகிறது. பொதுக்குழு நடைபெறும் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு மண்டபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஆர் பி உதயகுமார் ,திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, நத்தம் விஸ்வநாதன்,விஜயபாஸ்கர், பெஞ்சமின் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்விற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த நத்தம் விஸ்வநாதன், 11ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவிற்கான பணிகளை ஆய்வு செய்தோம் சட்ட விதிகளுக்கு உட்பட்டு 11ஆம் தேதி திட்டமிட்டபடி பொது குழு நடைபெறும், அனைத்து அதிகாரகளும் படைத்த பொறுப்பாக பொதுச் செயலாளர் பொறுப்பு உருவாக்கப்பட்டு, வருகின்ற 11ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
பொதுச்செயலாளர் ஆகிறார் இபிஎஸ்
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக நிர்வாகிகளால் எம்ஜிஆர், ஜெயலலிதா விற்கு பிறகு அதிமுக வின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறினார். ஓபிஎஸ்ஐ சுற்றி உள்ளவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக பொதுக்கூட்டம் நடைபெறாது என வைத்திலிங்கம் தவறான தகவலை பரப்பி வருகிறார். இரட்டை தலைமை சர்ச்சைக்குள்ளாகி உள்ளது என வைத்திலிங்கம் சொல்கிறார், நான் தான் ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ் சொல்கிறார் எனவே அவர்களுக்குள்ளேயே முரண்பாடு உள்ளதாக குறிப்பிட்டார். அதிமுக கழக சட்ட விதிப்படி தற்போது உள்ள பதவி ரத்து செய்யப்பட்டால் ஏற்கனவே உள்ள பழைய பதவி நடைமுறைகளில் இருக்கும் . எனவே தலைமை கழக நிர்வாகிகள் ஒரு மனதாக முடிவெடுத்து பொதுக்கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக நிர்வாகிகளின் விருப்பத்திற்கு ஏற்ப எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்