ஓபிஎஸ் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவா..! செல்லவே..செல்லாது..! இபிஎஸ் அணிக்கு திகில் கிளப்பிய வைத்தியலிங்கம்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டம் செல்லாது என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.
சூடு பிடிக்கும் ஒற்றை தலைமை விவகாரம்
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. சுமார் 5 ஆண்டுகள் ஆன நிலையிலும் பிரச்சனைகள் ஓய்ந்ததாக இல்லை, தற்போது ஒற்றை தலைமை என்ற விவகாரத்தால் ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக இரண்டாக பிளவு பட்டுள்ளது. ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடிக்கு ஆதரவு அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் தரப்போ ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கு இடம் இல்லையென கூறிவருகின்றனர். இதற்காக நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் ஓபிஎஸ் முறையிட்டுள்ளார். இந்தநிலையில் வருகிற ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இபிஎஸ் தரப்பு மேற்கொண்டு வருகிறது. இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பொதுக்குழு கூட்ட தீர்மானம், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்புவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இபிஎஸ் தரப்போ பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு தான் அதிக அதிகாரம் இருப்பதாக தெரிவித்துள்ளது. எனவே பொதுக்குழுவை கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழு நடக்க வாய்ப்பு இல்லை
அவைத்தலைவருக்கு அதிகாரம் இருந்தாலும் தற்போது அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட விதம் தவறானது என ஓபிஎஸ் தரப்பு கூறிவருகிறது. இந்தநிலையில், பொதுக்குழு ஏற்பாடு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்தியலிங்கம் கூறுகையில், தலைமைக் கழகம் அழைப்பு என்ற பெயரில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பிதழ் அனுப்புவது ஏற்புடையதல்ல என தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி தரப்பு சர்வாதிகார மனநிலையோடு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். ஜெயலலிதா இறந்த பின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதாகவும்,ஓபிஎஸ் இபிஎஸ் அணியோடு இணைந்த பிறகே பொருளாளர் மற்றும் அவைத்தலைவர் பொறுப்பில் தான் தேர்தல் ஆணையம் மீண்டும் இரட்டை இலை சின்னத்தை வழங்கியதாக தெரிவித்தார். தற்போது இரட்டை தலைமை சர்ச்சை உள்ளதால், பொருளாளருக்கு தான் சின்னமும் கட்சியையும் வழிநடத்தும் அதிகாரமும் உள்ளதாக தெரிவித்தார். தலைமைக் கழக நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டுவதாக இருந்தாலும் பொருளாளரான ஓபிஎஸ் ஒப்புதலின்றி கூட்டினால் அது செல்லாது என தெரிவித்தார். இதன் காரணமாக நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளும் எங்களுக்கு சாதகமாகவே வரும் என திட்டவட்டமாக கூறினார். எனவே, அழைப்பிதழ் அனுப்பி அனைத்து ஏற்பாடுகள் செய்தாலும் ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை வைத்தியலிங்கம் உறுதிபட தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
திமுக கட்சி விளம்பரங்களில் புறக்கணிக்கப்படும் உதயநிதி ஸ்டாலின்..! அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்