திமுக கட்சி விளம்பரங்களில் புறக்கணிக்கப்படும் உதயநிதி ஸ்டாலின்..! அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்
திமுக தொண்டர்கள் என்னை சின்னவர் என அழைக்கலாம் என உதயநிதி ஸ்டாலின் கூறிய நிலையில், சமீப நாட்களாக கட்சி விளம்பரங்களில் உதயநிதி ஸ்டாலின் படம் இடம் பெறாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சின்னவர் உதயநிதி
கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அதை தொடர்ந்து நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நிகராக உதயநிதி ஸ்டாலினும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதோடு சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வும் ஆனார். கடந்த சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையின் போது தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படாமல் இருப்பதை சாடும் விதமாக ஒற்றை செங்கல்லை காட்டி பிரச்சாரம் செய்தது மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது. பொதுவாக திமுக கட்சி விளம்பரங்களில் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் படங்கள் இடம் பெறுவது வழக்கம். தீவிர அரசியலில் உதயநிதி ஈடுபட துவங்கியது முதல் தமிழகம் முழுவதும் கட்சி சார்ந்த விளம்பரங்களில் உதயநிதி ஸ்டாலினின் படமும் இடம் பெற்று வந்தது. சட்டமன்றத்தில் உரையாற்றும் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கூட உதயநிதி பெயரை சொல்லாமல் தவறியதில்லை.
சின்னவர் என அழைக்க சொன்னேனா? இது என்ன புது பிரச்சனையா இருக்கு..ஷாக் ஆன உதயநிதி
திமுக விளம்பரங்களில் உதயநிதி?
இந்த நிலையில், சமீபத்தில் புதுக்கோட்டையில் நடைப்பெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற உதயநிதி பேசும் போது, தன்னை மூன்றாம் கலைஞர் என அழைக்கிறார்கள். அதில் எனக்கு துளியும் விருப்பமில்லை எனவும், உங்களை விட அனுபவத்தில், உழைப்பில் உங்களை விட சின்னவன் என்பதால் என்னை சின்னவர் என அழைக்கலாம் என கூறினார். உதயநிதியின் பேச்சு சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டது. இதனால் திமுக தலைவர் ஸ்டாலினும் அப்செட்டில் உள்ளதாகவும், இனி உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சிகள் தவிர்த்து மற்ற கட்சி விளம்பரங்களில் உதயநிதியின் புகைப்படத்தை தவிர்க்க வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக இன்று நாமக்கலில் நடைபெறவுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு தொடர்பான விளம்பரங்களில் எதிலும் உதயநிதியின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை.
சின்னவர் என அழைக்க வேண்டாம்
இதன் எதிரொலியாக சென்னை ஆதம்பாக்கத்தில் நேற்று நடைப்பெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சின்னவர் என நான் கூப்பிட சொன்னதாக தகவல் பரவி இருக்கிறது. இருக்கிற பிரச்சினையில் இந்த பிரச்சனை வேறையா என கூறினார். நான் அப்படி சொல்லவே இல்லை எங்கே சென்றாலும் சின்னவர் சின்னவர் என அழைக்கின்றனர். பல்வேறு கூட்டங்களுக்கு செல்லும் போது என்னை மூன்றாம் கலைஞர், இளம் கலைஞர் என்றெல்லாம் என்னை அழைக்கின்றனர். என் மீது உள்ள அன்பு காரணமாக அப்படி அழைக்கின்றனர் ஆனால் என்னை பெருமைப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு கலைஞரை சிறுமைப்படுத்துவதாக உள்ளதாக கூறினார்.
இதையும் படியுங்கள்