பாஜகவுடன் திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தமிழிசை கூறியது சுத்த பொய் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். ‘பாஜகவோடு ஸ்டாலின் பேசியதாக தமிழிசை சொல்வது சுத்த பொய்” என்று தமிழிசையை அப்போது சாடினார்.


சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கமல் பேசியது குறித்து கருத்து தெரிவித்த நாராயணசாமி, “தீவிரவாதம் ஒரு மதத்தை சார்ந்தது மட்டும் அல்ல. எல்லா மதத்திலும் உள்ளனர். கோட்சே இந்து மதத்தை சேர்ந்தவர்தான். காந்தியைக் கொன்றதாக தண்டிக்கப்பட்டவர். கமல் எந்த நோக்கத்தில் இதைப் பேசினார் எனத் தெரியவில்லை” என்று தெரிவித்தார்.


பாஜகவோடு திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தமிழிசை தெரிவித்ததைப் பற்றி கருத்து தெரிவித்த நாராயணசாமி, “தமிழக பாஜக தலைவர் தமிழிசை என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே பேசுகிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பிரகடணம் செய்தவர் திமுக தலைவர் ஸ்டாலின். அப்படி பிரகடணப்படுத்தியவர் பாஜகவுடன் ஏன் பேச வேண்டும்? தமிழிசை கூறியது வடிகட்டிய பொய்” என்று நாராயணசாமி கூறினார்.


மேலும் அவர் கூறுகையில், “பாஜக மதத்தை வைத்து தேர்தல் பிரசாரம் செய்துவருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி, தேர்தல் அறிக்கையை முன்வைத்து பிரசாரம் செய்துவருகிறது. பிரதமர் மோடி தரம் தாழ்ந்து அரசியல் செய்கிறார். சாதனையைச் சொல்லி ஓட்டு கேட்க முடியாததால், மதத்தை சொல்லி ஆட்சியைப் பிடிக்க பாஜக கனவு காண்கிறது.” என்று நாராயணசாமி தெரிவித்தார்.