புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பெருபான்மை இல்லாததால் கவிழ்ந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார். 

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பெருபான்மை இல்லாததால் கவிழ்ந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார். 

புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ் 15 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. கூட்டணி கட்சியான திமுக மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்தனர். இந்நிலையில் கடந்த மாதம் ஆளும் காங்கிரஸ் கட்சியை நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினமாக செய்துவிட்டு பாஜகவில் இணைந்தனர். ஏற்கனவே பாகூர் தொகுதியை சேர்ந்த காங்., எம்எல்ஏ தனவேலு தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, கடந்த வாரம் ஏனாம் தொகுதியை சேர்ந்த மல்லாடி கிருஷ்ணா ராவ், காமராஜர் தொகுதியை சேர்ந்த ஜான்குமார் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காங்கிரஸ் - 10, திமுக - 3, சுயேட்சை - 1 என அரசின் பலம் 14 ஆக குறைந்தது. அதே நேரத்தில், என்ஆர் காங்கிரஸ் - 7, அதிமுக- 4, நியமன எம்எல்ஏக்கள் (பாஜக) - 3 என எதிர்க்கட்சிகளின் பலம் 14 ஆக இருந்தது. இந்த நிலையில், 22ம் தேதி (இன்று) சட்டசபையை கூட்டி முதல்வர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டார். இந்நிலையில், நேற்று மாலை ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமிநாராயணன், தட்டாஞ்சாவடி தொகுதியை சேர்ந்த திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ஆகியோரும் தனித்தனியாக சபாநாயகர் சிவக்கொழுந்துவை அவரது இல்லத்தில் சந்தித்து தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தனர்.

எதிர்க்கட்சிகள் தரப்பில் 14 பேர் ஆதரவு உள்ள நிலையில், நாராயணசாமி அரசுக்கு தற்போது 12 எம்எல்ஏக்கள் ஆதரவுதான் உள்ளது. நாராயணசாமி அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்ட பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 10 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக சட்டப்பேரவை கூடியது. இப்போது, முதல்வர் நாராயணசாமி மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டு முன்வைத்தார். மத்திய அரசு மீது முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியபோது எதிர்க்கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வியடைந்தது என சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதனால், நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பெருபான்மை இல்லாததால் கவிழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.