Naralokesh asset value

ஐந்து மாதத்தில் 23 மடங்கு சொத்து அதிகரிப்பு…முதலமைச்சரின் மகன் மீது சந்தேகம்…

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நரலோகேஷின் சொத்து மதிப்பு கடந்த ஐந்து மாதங்களில், 23 மடங்கு அதிகரித்து, 330 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது..

ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலராக, அவர் மகன், நரலோகேஷ் செயல்பட்டு வருகிறார்.

தமிழகம், ஆந்திராவில் சக்கை போடு போடும் ஹெரிட்டேஜ் ப்ரெஷ் சூப்பர் மார்கெட், மற்றும் ஹெரிட்டேஜ் பால் நிறுவனங்களும் இவருக்கு சொந்தமானது தான் .

இந்நிலையில் ஆந்திர மாநில சட்ட மேல்சபை தேர்தலுக்கு, நேற்று முன்தினம், லோகேஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதனுடன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், லோகேஷின் சொத்து மதிப்பு, 330 கோடி ரூபாயாக குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன், அவர் அறிவித்திருந்த சொத்து மதிப்பைவிட, இது, 23 மடங்கு அதிகம்.

கடந்த ஆண்டு, அக்டோபரில், வெளிப்படைத் தன்மையை நிலைநாட்டும் நோக்கில், தன் சொத்து மதிப்பு குறித்த அறிவிப்பை, லோகேஷ் வெளியிட்டார்.

அதில், 14 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் மட்டுமே தனக்கு இருப்பதாக, லோகேஷ் குறிப்பிட்டிருந்தார். மேலும் அந்த அறிவிப்பில், 6 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாகவும் அவர் ,தெரிவித்திருந்தார்.

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு 14 கோடியாக இருந்த நரலோகேஷின் சொத்து மதிப்பு தற்போது 330 கோடியாக எப்படி உயர்ந்தது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.