சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு திமுக மேடையில் ஏறி முழங்கியிருக்கிறார் நாஞ்சில் சம்பத். மதிமுகவில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், திமுக மேடையில் ஏறி அதிமுக-பாஜக கூட்டணியைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பொதுக்கூட்டம் பிராட்வே பகுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறாப்பு விருந்தினராக நாஞ்சில் சம்பத் பங்கேற்றார். நீண்ட நாள் கழித்து அரசியல் மேடையேறிய நாஞ்சில் சம்பத், ஸ்டாலினை புகழ்ந்தும், அதிமுக கூட்டணியைக் கடுமையாக விமர்சித்தும் பேசினார். அந்தக் கூடத்தில் அவர் பேசியது:
இதுவரை நான் பேசிய பேச்சுக்களை புத்தகமாக தொகுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேஎன். இடையே ஒரு திரைப்படத்திலும் நடித்துவிட்டேன். சினிமாவையும் பயன்படுத்திக் கொண்டேன். சினிமாவில் நடித்த பிறகு தற்போது வீதியில் இறங்கி என்னால் நடக்க முடியவில்லை.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்கிற சிமிழுக்குள் இந்தியாவை அடைக்க பாசிச சக்திகள் முயற்சி செய்துவருகின்றான. அதை ஒழிக்கும் முயற்சியில் திமுக கூட்டணி இறங்கியிருக்கிறது. அதில் எனது குரல் ஒலிக்காமல் போகுமானால் நான் உயிரோடு இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.


இந்தியாவின் அடுத்த பிரதமர் பெயரை அறிவிக்கிற துணிச்சல் மு.க. ஸ்டாலினுக்கு மட்டுமே இருக்கிறது. இதை நான் சொல்லும்போது நான் ஏதோ ஒரு முடிவை எடுத்து விட்டேன் என்று நீங்கள் நினைக்கலாம். இதுவரை முடிவு எடுக்கவில்லை. ஆனால், பாசிச சக்தியை ஒழிக்க எனது குரல் ஏதாவது ஒரு மேடையில் நிச்சயம் ஒலிக்கும்.
நான் திமுகவில் இடம் பெற்று சீன் போடுவதற்காக இந்தக் கூட்டத்துக்கு வந்திருப்பதாக பலர் பேசலாம். ஆனால், கருணாநிதியின் சொற்கள் இன்னும் என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது.” இவ்வாறு  நாஞ்சில் சம்பத் பேசினார்.
1993-ம் ஆண்டில் வைகோ  திமுகவிலிருந்து விலகிய பிறகு, கடந்த 25 ஆண்டுகளாக திமுகவை விமர்சித்துவந்தவர் நாஞ்சில் சம்பத். கடந்த சில நாட்களாக அவர் பேசிய பேச்சின் அடிப்படையில், அவர் மதிமுகவில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கால் நூற்றாண்டுக்கு பிறகு  நாஞ்சில் சம்பத் திமுக மேடை ஏறி பேசி இருப்பதன் மூலம், அவர் திமுகவில் சேரவே வாய்ப்புகள் அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது.