வைகோவைப் போல சிம்மக்குரலில் உலக வரலாற்றை அள்ளிக் கொட்டுகிற ஒருவர் இந்த தமிழகத்தில் மட்டுமல்ல தரணியிலேயே யாரும் கிடையாது என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

திமுகவில் இருந்து வைகோ  பிரிந்த போது அவருடன் ஒரு உடன் பிறப்பாக ஒட்டிக்கொண்டு வந்தவர்தான் நாஞ்சில் சம்பத். பல ஆண்டுகளாக மதிமுகவின் பிரச்சார பீரங்கியாக செயல்பட்டவர். வைகோவுக்கு இணையாக பேச்சாற்றலில் வல்லவர் என மதிமுக தொண்டர்களால்  போற்றி பாராட்டப்படுபவர் நாஞ்சில் சம்பத்.

அப்படிப்பட்ட நாஞ்சில் சம்பத், யாருடைய கண் பட்டதோ தெரியவில்லை, திடீரென மதிமுகவில் இருந்து  விலகி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

அப்போது அவருக்கு ஜெயலலிதா இன்னோவா கார் ஒன்றை பரிசாக அளித்தார். அதையும் பல எதிர்கட்சியினர் இன்னோவா சம்பத் என பயங்கரமான கிண்டல் செய்தனர். ஆனால் அதையெல்லாம் அவர் புறம் தள்ளி, அதிமுக தொண்டர்களை தனது வசீகர பேச்சால் மயக்கி வந்தார். தற்போது டி.டி.வி.தினகரன் அணியில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் Naughty Nights என்ற ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நாஞ்சில் சம்பத் பங்கேற்று கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அந்த தொலைக்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் RJ விக்னேஷ், மறுபடியும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் யாருடைய நட்பை நீங்க மிஸ் பண்ணமாட்டீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பளிச்சென்று வைகோ என பதிலளித்தார்  நாஞ்சில் சம்பத். தொடர்ந்து பேசிய அவர், வைகோவைப் போல சிம்மக்குரலில் உலக வரலாற்றை அள்ளிக் கொட்டுகிற ஒருவர் இந்த தமிழகத்தில் மட்டுமல்ல தரணியிலேயே யாரும் கிடையாது என உருக்கத்துடன்  குறிப்பிட்டார்.

வைகோ- நாஞ்சில் சம்பத் இடையே இருந்த இந்த நட்பின் வலிமையை அறிந்த நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் ஒரு கணம் நெகிழ்ச்சியடைந்தனர்.