‘செலக்டீவ் அம்னீசியா’...மற்றவர்களுக்கு வந்தால் இது வியாதி. ஆனால் அரசியல்வாதிகளுக்கு வந்தால் அது  வாய்ப்பு. அதிலும் நாஞ்சில் சம்பத்தை கடந்த  ஏழெட்டு ஆண்டுகளாக ஆட்டிப்படைக்கும் இந்த ‘குறிப்பிட்ட பழைய விஷயங்கள் மட்டும் மறந்து போகும்’ செலக்டீவ் அம்னீசியா வியாதியின் மூலம் அவர் அடைந்திருக்கும் லாபங்கள் தாராளம், தாவிக் குதித்திருக்கும் கட்சிகளோ ஏராளம். 

தி.மு.க.விலிருந்து வைகோவுடன் வெளியேறி ம.தி.மு.க.வில் இணைந்து அவரது நிழலாகவே கோலோச்சி, பின் வைகோவுடன் முரண்பட்டு அவரை தூற்றிவிட்டு வெளியேறி அ.தி.மு.க.வில் வசதிகளோடு வலம் வந்து, பின் ஜெ., மரணத்துக்குப் பின் தினகரன் அணியில் இணைந்து துதிபாடி, பின் அவரோடு முரண்பட்டு தி.மு.க.வுடன் டீலிங் பேசி சரிப்பட்டு வராததால், அரசியல் துறவறம்! என அறிவித்து, அதில் மனம் லயிக்காததால் இப்போது மீண்டும் ம.தி.மு.க.வுக்கு அடிபோட்டிருக்கும் கொள்கைப் போராளிதான் நாஞ்சில் சம்பத். 

பூமராங்காக புறப்பட்ட இடமான ம.தி.மு.க.வின் வாசலுக்கே மீண்டு வந்து நிற்கும் சம்பத் சமீபத்தில் உதிர்த்திருக்கும் அரசியல் விமர்சனங்கள், பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தத்துவங்கள். ஒருகாலத்தில் யாரையெல்லாம் சம்பத் கழுவிக் கழுவி ஊற்றினாரோ அவர்களை இப்போது தலையில் தூக்கி வைத்துப் பேசியிருக்கிறார். சந்தர்ப்பவாதம்தான் அரசியல் ஆனால் அதிலும் இவ்வளவு மோசமாக போகக்கூடாது. 

சம்பத்தின் தத்துவங்களில் சிலவற்றை இங்கே காண்போம், வாசித்து மனதில் செதுக்கிக் கொள்ளுங்கள்...

*    மக்கள் பிரச்னை ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு எவ்வித சமரசத்துக்கும் ஆட்படாமல், பணம் பாதாளம் வரைக்கும் பாயும் என்பதைப் பொய்யாக்கிய முதல் தலைவராக வைகோ இன்று என் கண்களுக்கு தெரிகிறார். 

*    அ.தி.மு.க.வின் தேர்தல் கூட்டணியைப் பற்றிக் கேட்கிறார்கள். தங்களை ‘விற்றுக் கொண்டவர்கள்’ கூடி நின்று இதற்கு கூட்டணி என்று பெயர்வைத்துள்ளனர். 

*    தன் மகனை எப்படியாவது மத்திய மந்திரியாக்கிப் பார்க்க ராமதாஸ் போட்டிருக்கும் மெகா  குட்டிக்கர்ணம்தான் இந்த கூட்டணியில் அவர் இணைந்த நிகழ்வு. 

*    பா.ஜ.க.வை நம்பிச் சென்றவர்கள் படுகுழியில் விழுவதுதான் யதார்த்தம். இந்த முறையும் அவர்களுடன் கூட்டணி வைத்தார், தே.மு.தி.க. அஸ்தமனம் ஆகிவிடும். 

*    எந்த ஆக்கப்பூர்வமான திட்டமும், குறிக்கோளும் இல்லாத விளையாட்டு பிள்ளை போல் நடந்து கொள்கிறார் தினகரன். 

*    அறிவார்ந்த அரசியல் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட தினகரன் இப்படி தனக்குத்தானே சுவரில் மோதிக் கொண்டு காயப்பட்டுக் கொள்கிறார். 

*    மோடியால் ஏற்பட்ட காயம், பஞ்சம் பசிக்கு மருந்தாகவும், விருந்தாகவும் விளங்கப்போகிறார் ராகுல். 

*    தானும் குழம்பி, தமிழகத்தையும் குழப்பும் ரஜினியின் அரசியல் இனி தமிழகத்தில் எந்த காலத்திலும் எடுபடாது. 

*    எனக்கு உரிய மரியாதையைத் தந்தால் தி.மு.க. மேடைகளில், வகுப்புவாத சக்தியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய தயார். வைகோவை ஆதரித்தும் பிரசாரம் செய்வேன். 

...................ம்ம்ம்ம்ம்முடியல!