2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தமிழக பாஜக தயாராகிக் கொண்டிருக்கிறது. மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் அந்தக் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லை. இந்த முறை இக்குறையைப் போக்க வேண்டும் என்று அக்கட்சி நினைக்கிறது. அதிமுகவோடு கூட்டணியில் இருப்பதாலும், இம்முறை கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக உள்ளது. அதன் ஒரு பகுதியாக, ‘எம்.எல்.ஏ. தொகுதியில் பாஜகவை வெற்றி பெற வைக்கும் மாவட்ட தலைவருக்கும் இன்னோவா கார் பரிசு அளிக்கப்படும்’ என்று பாஜக தலைவர் எல்.முருகன் சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார்.
எம்.முருகனின் இந்த அறிவிப்புக்கு நாஞ்சில் சம்பத் பதிலடிக் கொடுத்திருக்கிறார். மதிமுகவிலிருந்து அதிமுகவுக்கு சென்றபோது கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் பதவியும் இன்னோவா காரையும் அன்றையை முதல்வர் ஜெயலலிதா, நாஞ்சில் சம்பத்துக்கு வழங்கினார். அன்று முதலே இன்னோவா காரும் தமிழக அரசியலில் இடம் பெறத் தொடங்கிவிட்டது. தற்போது பாஜக தலைவரும் இன்னோவா கார் பரிசு என்று அறிவித்திருப்பதால், இன்னோவா காரின் தாக்கம் தேர்தல் வரை எதிரொலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் இதுதொடர்பாக நாஞ்சில் சம்பத் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “வெற்றிபெற வைக்கிற மாவட்டத் தலைவருக்கு இன்னோவா கார் என்றால் பரிசுன்னா, இனி என்ன பாவம் செய்யப்போறங்கன்னு கணக்கிட்டுப் பார்க்கணும். இந்த அறிவிப்பு தேர்தல்ல பாஜக பல்லாயிரக்கணக்கான கோடிகள செலவு செய்ய தயாராயிடுச்சின்னு காட்டுது. அவுங்களுக்கு (பாஜக) நான் எச்சரிக்கையாவே சொல்றேன். இன்னோவா கார் அல்ல, ஏரோபிளேனே வாங்கிக்கொடுத்தாலும் தமிழ்நாட்டுல தாமரை மலரவே மலராது.” என்று தெரிவித்துள்ளார்.