நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் அறிவித்துள்ளார். நாங்குநேரி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதையடுத்து காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரான ஹெச்.வசந்தகுமார், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலின்போது, கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அந்தத் தொகுதியில் பா.ஜ.க சார்பாகப் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்துக் களமிறங்கிய அவர், 2,59,808 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைக் கைப்பற்றினார்.

 

இந்நிலையில் மக்கள் பிரதிநிதி ஒருவர் இரு அதிகாரப் பகுதிகளை வகிக்க முடியாது என்பது சட்ட வரையறை. இதனையடுத்து கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளராக வசந்தகுமார் வெற்றி பெற்றதையடுத்து தனது எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்தார். இதனால் சட்டப்பேரவையில் 8 எம்.எல்.ஏ.க்களாக இருந்த காங்கிரஸ் கட்சியின் பலம் 7-ஆக குறைந்துள்ளது. 

இந்நிலையில், நாங்குநேரி தொகுதி காலியாக உள்ளது என்று சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் அறிவித்துள்ளார். நாங்குநேரி தொகுதி காலியானதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.