வழக்கமாக தேர்தல் புறக்கணிப்பு என்றால் பெயர் அளவிற்கு தான் இருக்கும் என்கிற விமர்சனத்தை அடித்து சுக்குநூறாக்கியுள்ளனர் நாங்குநேரி பகுதியை சேர்ந்த தேவேந்திர குல வேளாளர்கள்.

தென் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் கணிசமாக வாழக்கூடியவர்கள் தேவேந்திர குல வேளாளர்கள். இவர்களுக்கு ஏழு உட்பிரிவுகள் உண்டு. ஆனால் ஏழு உட்பிரிவினரையும் தனித்தனியாகவே வகைப்படுத்தி அரசு அவர்களை தலித்து என்று பட்டியலிட்டு வைத்துள்ளது. புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, தேவேந்திர குல வேளாளர்களின் தலைவராக கருதப்பட்டு வருகிறார்.

இவர்கள் நீண்ட காலமாக தங்களை தலித் பட்டியலில் இருந்து நீக்கி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அதோடு தங்களது ஏழு உட்பிரிவுகளையும் ஒன்றாக்கி தேவேந்திர குல வோளாளர்கள் என்று தங்களை அறிவிக்க வேண்டும் என்பதும் இவர்களின் கோரிக்கை. இந்த கோரிக்கையை முன்வைத்தே அதிமுக கூட்டணியில் இணைந்ததாக கிருஷ்ணசாமி கூறி வந்தார்.

இந்த நிலையில் தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் நாங்குநேரியில் அதிமுகவிற்கு ஆதரவு இல்லை என்று கிருஷ்ணசாமி அறிவித்தார். அதோடு மட்டும் அல்லாமல் தேவேந்திர குல வேளார்களை தலித் பட்டியலில் இருந்து நீக்க வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பையும் அறிவித்தனர். நேற்று வாக்குப் பதிவு நடந்து முடிந்த நிலையில் நாங்குநேரியில் வெறும் 65 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

வழக்கமாக இடைத்தேர்தல் என்றால் தமிழகத்தில் எளிதாக 85 சதவீத வாக்குகளை தாண்டும். சில சமயங்களில் 90 சதவீதம் கூட வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. ஆனால் நாங்குநேரியில் சுமார் 20 சதவீத வாக்குகள் குறைந்ததற்கு 113 கிராமங்களை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர்கள் தான் என்கிறார்கள். அவர்கள் எடுத்த முடிவின் படி வாக்குப் பதிவை புறக்கணித்து அமைதிப் புரட்சி நடத்தியுள்ளனர் என்கிறார்கள்.

வாக்குக்கு பணம் என்று சென்றவர்களையும் இவர்கள் அடித்து துரத்தியது நினைவு இருக்கலாம். தேர்தல் புறக்கணிப்பு இந்த அளவிற்கு வெற்றி பெறம் என்று நினைத்துக் கூட பார்க்காத அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.