Asianet News TamilAsianet News Tamil

மேற்குத்தொடர்ச்சி மலைக்கு ஆபத்து.!! தனியார் நிறுவனத்தை அனுமதிக்கும் அயோக்கியத்தனம், தாறுமாறாக எகிறும் சீமான்

புலிகள் காப்பகம், யானை பாதுகாப்பு என்று மக்களை வனப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தும் அரசு தனியார் நிறுவனத்தை உள்ளே அனுமதித்தால் அதை விட அயோக்கியத்தனம் எதுவும் இருக்க முடியாது.  


 

namtamilnar party coordinator seeman condemned reliance company and government  regarding marku thodarchi malai
Author
Chennai, First Published Jun 6, 2020, 2:33 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

பைபர் கேபிள் பதிக்கும் போர்வையில் முதுமலை வனப்பகுதியை ஆக்கிரமிக்க முயலும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:-   நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் தெப்பக்காடு முதல் வழியாக மசினகுடி மோயர் வரை ரிலையன்ஸ் நிறுவனம் கண்ணாடி ஒளியிழை வடங்களைப் (Fibre Optical Cable)பதிக்க மத்திய அரசிடம் அனுமதி கோரியிருப்பதாக வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. வனப்பகுதியில் வாழும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக விறகு சேகரிக்கவும், வெள்ளாடு மேய்க்கவுமே தடைவிதித்திருக்கும் அரசாங்கம், ஒரு தனியார் நிறுவனத்திற்கு காட்டிற்குள் 16 கிலோமீட்டர் இடத்தைப் பயன்படுத்த எக்காலத்திலும் அனுமதிக்கக் கூடாது. புலிகள் காப்பகம், யானை பாதுகாப்பு என்று மக்களை வனப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தும் அரசு தனியார் நிறுவனத்தை உள்ளே அனுமதித்தால் அதை விட அயோக்கியத்தனம் எதுவும் இருக்க முடியாது. 

 

மேலும் தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டால் வருங்காலங்களில் இன்னும் பல நிறுவனங்கள் காடுகளை ஊடறுத்துத் தங்கள் ஒளியிழைகளைப் பதிக்க அனுமதி கோரும். எதிர்காலத்தில் அந்தப் பாதையே ஆக்கிரமிப்பு பகுதியாகவும், பல ஆண்டுகள் பயன்படுத்தியதை சுட்டிக்காட்டி அந்நிறுவனங்கள் அவ்வழிதடத்தை நிரந்தர உரிமைகோரும் நிலையும் உண்டாகும். இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்தால் பன்னாட்டு முதலாளிகளால் வனப்பகுதி முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு இப்பகுதியில் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் முற்றாக அழித்தொழிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.  கொஞ்சம் கொஞ்சமாக மேற்குத் தொடர்ச்சி மலையின் வளங்களை முற்றாக அபகரிக்கும் பன்னாட்டுக் கூட்டிணைவு நிறுவனங்களின் மறைமுகச் செயல்திட்டத்தின் தொடக்கமாகவே இதை கருதவேண்டியுள்ளது. ஏற்கனவே செல்போன் கோபுரங்களிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சால் சிட்டுக் குருவிகள், தேனீக்கள் உள்ளிட்ட நாட்டில் உள்ள பல்வேறு உயிரினங்கள் பாதிக்கபடுவதாக ஆய்வுகள் கூறுகின்றது. தற்போது காடுகளிலும் மீதமுள்ள பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களை அழிக்கும் முயற்சியாகவே இந்த  ஒளியிழை வடம் பதிக்க முயலும் செயலையும் கருதவேண்டியுள்ளது. 

விஞ்ஞானம், வளர்ச்சி ஆகியவை மனிதருக்குத் தேவைதான். ஆனால் மனித தேவையானது இயற்கையோடு இயைந்து முன்னேறுவதாக இருக்கவேண்டுமேயன்றி, தன்னைச்சுற்றி வாழும் இதர உயிரினங்களை அழித்து  இயற்கையைப் பாழ்படுத்தும் வகையில் இருந்திட கூடாது. இயற்கை வளங்களான காடுகள், மலைகள், ஆறுகள் எல்லாவற்றையும் அழித்துவிட்டு எதை விட்டுச்செல்லப் போகிறோம் நமது அடுத்த தலைமுறைக்கு..? அண்மைக்காலமாக காட்டில் உள்ள யானைகள், மான்கள், குரங்குகள் உள்ளிட்ட உயிரினங்கள் உணவு தேடி ஊருக்குள் வரும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. மனிதர்களால் இதுவரை அழிக்கப்பட்ட காடுகளினால் வாழ்விடத்தையும், மழைப்பொழிவையும் இழந்து காடுகள் வறண்டு குடிநீருக்கே அலைந்து திரியும் அவலநிலையில் வனவிலங்குகள் சிக்கித் தவிக்கின்றன. இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் மனிதர்களின் சுயநலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டால் இயற்கை சமநிலை சீர்கெட்டு பல்லுயிர்ப் பெருக்கம் தடைபட்டு நாளை மனித இனமும் அழியும் நிலை ஏற்படும். மண்ணை வாழவைக்காது, காடுகள், மலைகள், நீர்நிலைகளைப் பாதுகாக்காது, பூச்சிகள், பறவைகள், விலங்குகளை வாழவைக்காது, இம்மண்ணில் வாழ்கின்ற ஒற்றை உயிரினமான மனிதனை வாழ வைக்கவே முடியாது.

கொரோனா ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி  கடந்த மே மாதம்  இந்தியா முழுவதும் இதுபோல் 13 வனப்பகுதிகளை அழிக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசு  ஒப்புதல் அளித்ததை  நாம் தமிழர் கட்சி கடுமையாக எதிர்த்து அதைத் திரும்பப்பெற வலியுறுத்தியது. அதைப்போலவே முதுமலை வனப்பகுதியில் ஒளியிழை வடம் பதிக்க அனுமதி என்கிற பெயரில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்குத் தாரைவார்க்கும் முயற்சியையும் எதிர்க்கிறோம். எனவே, தமிழகத்தில் இத்தகைய தனியார் நிறுவனங்களின் வளவேட்டைக்கு ஆதரவாக மாநில அரசும், மத்திய அரசும் எந்த அனுமதியும் வழங்கக் கூடாது என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். மாறாக இதுபோன்ற இயற்கை வளங்களை அழிக்கும் திட்டங்களுக்கு அனுமதி வழங்கினால் சட்டரீதியான போராட்டத்தையும், மாநில அளவிலான மக்கள் திரள் பெரும்போராட்டங்களையும் ஒருசேர நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கிறேன்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios