Asianet News TamilAsianet News Tamil

எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக அரசு ஈழத்தமிழர்களை வாட்டி வதைப்பதா..!! இலங்கைத் தமிழர்களை விடுவிக்க சீமான் கோரிக்கை..

ஈழ விடுதலையை முழுமையாக ஆதரித்து அதற்காகப் பங்களிப்புச் செலுத்தி துணைநின்ற மறைந்த எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி, இன்றைக்கு அதே ஈழத்தமிழர்களை அதிகாரம் கொண்டு வாட்டி வதைப்பதும், சிறப்பு முகாம்கள் எனும் பெயரில் சித்திரவதைக்கூடத்தில் அடைத்து வைத்து துன்புறுத்துவதும் ஏற்கவே முடியா பெருங்கொடுமையாகும்.

namtamilar party seeman demand release eela tamizargal from prison
Author
Chennai, First Published Jun 13, 2020, 6:18 PM IST

திருச்சி மத்திய சிறை வளாகச் சிறப்பு முகாமிலுள்ள ஈழத்தமிழ்ச் சொந்தங்களை விடுவிக்க அரசு முன்வர வேண்டும் என நாம் தமிழர்கட்சியின் தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் 31 பேர் உள்ளிட்ட 52 பேர் சாகும்வரைப் பட்டினிப்போராட்டத்தில் ஈடுபட்ட செய்தி பெரும் அதிர்ச்சியையும், ஆழ்ந்த மனவேதனையையும் தருகிறது. தங்களை விடுவிக்கக்கோரி அறப்போராட்டத்தைத் தொடங்கியுள்ள அவர்களது கோரிக்கை மிக தார்மீகமானது. நியாயமானது. அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக வரவேற்கிறது. ஈழத்தமிழர்களென்றாலே, கியூ பிரிவு காவல்துறையினர் சந்தேகக்கண் கொண்டு பார்ப்பதும், விசாரணை எனும் பெயரில் அத்துமீறுவதும், பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதும், பொய்‌வழக்குகளின் கீழ் கைதுசெய்து அடைத்து வைப்பதும், பணிக்குக்கூட‌ செல்லவிடாது நாள்தோறும் தொந்தரவு செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. 

namtamilar party seeman demand release eela tamizargal from prison

அதனைக் கண்டித்து எத்தனையோ முறை போராடியும், அதற்கெதிராகக் கோரிக்கை வைத்து நெடுங்காலம் மன்றாடியும் ஆளும்‌ வர்க்கம் எவ்விதத் தீர்வையும் தந்தபாடில்லை. திமுக கொண்டு வந்த காரணத்தினாலேயே எதனையும்‌ எளிதாகப் புறந்தள்ளும் அதிமுக அரசு, திமுகவின் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட சிறப்பு முகாம்களை மட்டும் மூட மறுத்து தொடர்ந்து வருவது அரசியல் விந்தை.சட்டவிரோதமாக வெளிநாடு தப்ப முயன்றது தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் தண்டனைக்காலம் முடிந்தப் பின்னும் விடுவிக்கப்படாமல் சிறைப்படுத்தப்பட்டும், பொய் வழக்குகளின்கீழ் அடிக்கடி‌ கைது செய்யப்பட்டும் வருகிறார்கள். திட்டமிட்டு இத்தகைய அதிகார அத்துமீறல்கள் அரங்கேற்றப்பட்டு வருகிறது என்பதை மீண்டும் மீண்டும் எடுத்துரைத்தும் அரசின் செவிகள் கேட்க மறுக்கிறது. இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்று வீரியமாகப் பரவும் இப்பேரிடர் காலத்தில் தங்களைத் தற்காத்துக் கொள்ள குறைந்தது பிணையிலாவது தற்காலிகமாக விடுவிக்க வேண்டும் எனும் கோரிக்கையை முன்னிறுத்தியே இப்போராட்டத்தைக் கடந்த 8ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளனர். 

namtamilar party seeman demand release eela tamizargal from prison

அவ்வாறு பட்டினிப்போராட்டம் செய்தவர்களைக் காவல்துறையினரைக் கொண்டு கொடூரமாகத் தாக்கியிருக்கிறார்கள். மனிதநேயமற்ற இக்கொடுஞ்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஈழ விடுதலையை முழுமையாக ஆதரித்து அதற்காகப் பங்களிப்புச் செலுத்தி துணைநின்ற மறைந்த எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி, இன்றைக்கு அதே ஈழத்தமிழர்களை அதிகாரம் கொண்டு வாட்டி வதைப்பதும், சிறப்பு முகாம்கள் எனும் பெயரில் சித்திரவதைக்கூடத்தில் அடைத்து வைத்து துன்புறுத்துவதும் ஏற்கவே முடியா பெருங்கொடுமையாகும்.  மனிதநேயத்தோடு அவர்களது போராட்ட உணர்வை மதித்து அவர்களது கோரிக்கையிலிருக்கும் நியாயத்தை‌ கனிவோடு பரிசீலித்து அவர்களது துயர் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசின் முழுமுதற்கடமையாகும். ஆகவே, திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் சிறைப்படுத்தபட்டுள்ள ஈழச்சொந்தங்கள் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சார்பாக‌ தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios