அமெரிக்க முன்னாள் அமைச்சர் ஹிலாரி கிளின்டனிடம்  ஈழத்தமிழர்கள் குறித்து பேசியது பற்றி  ஜெயலலிதா தன்னிடம்  விவரமாக கூறினார் என  சீமான் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார் ஜெயலலிதாவின் 3 ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரது நினைவுகளை பகிர்ந்து கொண்ட அவர்,  ஜெயலலிதாவை நேரில் சந்தித்தபோது தன்னிடம் அன்பாகவும் பரிவாகவும் அவர் பேசியது இன்னும் என் நினைவில் நீங்காமல் உள்ளது என்றார். 

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும்,  ராஜபக்சே ஒரு போர்க் குற்றவாளி சர்வதேச நீதிமன்றம் ராஜபக்சவை விசாரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்காக ஜெயலலிதா அவர்களுக்கு நன்றி தெரிவிக்க சென்றிருந்தேன்.  அப்போது  என்னிடம் ஈழத் தமிழர்கள் குறித்து  நிறைய பேசினார்கள்.  அத்துடன் ஹிலாரி கிளின்டன் தன்னை சந்தித்தபோது சுமார் 45 நிமிடம் ஈழத்தமிழர்கள் பிரச்சனை குறித்து அவரிடம்  பேசியதாக ஜெயலலிதா என்னிடம் தெரிவித்தார் என சீமான் கூறினார். இந்த விவகாரத்தில் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் வராமல்  மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது எனவே எல்லோரும் சேர்ந்து போராடி வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டு வருவோம் என ஜெயலலிதா தன்னிடம் கூறியதாக சீமான் தெரிவித்தார்.  

அவர் கூறியது அனைத்தும் என் நினைவில் இருக்கிறது,  ஜெயலலிதாவுக்கு என்னுடைய புகழ் வணக்கம் செலுத்துகிறேன் என சீமான் கூறினார். மேட்டுப்பாளையம் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பணம் தருவது தற்காலிகமான நிவாரணமாக மட்மே  இருக்கும் எனவே அவர்களுக்கு நிரந்தர நிவாரணம் வழங்கும் வகையில்  கல்வித் தகுதிக்கு ஏற்ப குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அப்போது சீமான் கோரிக்கை விடுத்தார்.