வாரிசு உள்ளவர்கள் தான் அரசியலில் வாரிசாக வர முடியும், அது இல்லாதவர்கள் எப்படி வர முடியும் என திருவாளர் துண்டுச்சீட்டு கல்யாண வீட்டில் நின்று கொண்டு கண்ணியமற்று பேசி இருக்கிறார் என அதிமுக நாளேடு மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளது. 

இது தொடர்பாக அதிமுக அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் " இவர் வாரிசு இல்லாதவர் என்று யாரை சொல்கிறார். இவரது அப்பன் கருணாநிதிக்கு பொதுவாழ்க்கையில் முகவரி கொடுத்த காஞ்சித் தலைவன் அண்ணாவை சொல்கிறாரா? இல்லை திராவிட இயக்கத்தின் வெற்றித் தேரோட்டத்திற்கு வித்திட்ட பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரை பழிக்கிறாரா? இல்லை தன் ஆயுளையை மக்கள் தொண்டுக்கே ஒப்படைத்து போன மகத்தான மனிதர் கர்மவீரர் காமராஜரை குறிக்கிறாரா? 

இல்லை.. ஓடி ஓடி உழைத்து ஒவ்வொரு திரைப்படங்களாக நடித்து சிறுகச்சிறுக சேர்த்த செல்வத்தையும் இயலாதோருக்கும், ஏழைகளுக்கும் வாய் பேச முடியாத ஊமைகளுக்கும் உயில் எழுதி வைத்து விட்டு இன்று உலகம் உச்சரிக்கும் மூன்றெழுத்து மந்திரமாய் தமிழர்தம் உள்ளமெல்லாம் நிறையாசனமிட்டு வீற்றிருக்கும் தங்கத் திருமேனியராம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை சொல்கிறாரா? இல்லை மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்னும் மா தவத்தால் வாழ்ந்து தமிழ் இனமே தனக்குறவு தமிழகமே தனக்கு வேலி என்னும் மாண்புளத்தால் தமிழ் மண்ணை ஆண்டு வங்கத்து கடலோரம் துயில் கொண்டு தமிழகத்தை இன்றும் வழிநடத்தும் தங்கத் தாரகையாம் அம்மாவை பழக்கிறாரா? என்பதை உளறுவாய் ஸ்டாலின் உறுதிபடுத்த வேண்டும்.

தாம் பெற்ற பிள்ளைகள் மட்டுமே தங்கள் கட்சிக்கு தலைவராக முடியும் என்னும் வகையில் ஒரு கொத்தடிமைகள் கூட்டத்தை கட்சி என்னும் பெயரிலே நடத்துகிற கொள்ளை கூட்டம் தான் கோல்மால்புரம் என்பது நாடறிந்த அசிங்கம். இதில், வழி வழியாய் ஆள்வதற்கு வம்சாவளிகளை தயார்படுத்துவது புனிதமிக்க பொதுவாழ்வில் கழிவுநீர் வந்து கலந்ததற்கு சமம்.

தாங்கள் ஆற்றிய தொண்டுகளாலும், தாங்கள் படைத்த சாதனைகளாலும் இப்பூவுலகே போற்றுகின்ற போதனைகளாலும் மனித குலத்தின் மனங்களில் நிறைந்து நிற்பவர்கள் தான் மகத்தான தலைவர்கள். அதை விடுத்து பன்றி ஈனும் குட்டிகள் போல பல பிள்ளைகளை பெத்துப் போடுவதால் மட்டுமே அது பெருமை தருவது ஆகாது. 

எனவே, அண்ணாவையும், பெரியாரையும், காமராஜரையும், புரட்சித்தலைவரையும், புரட்சித்தலைவி அம்மாவையும் வாரிசற்ற தலைவர்கள் என்பதை குறிப்பால் உணர்த்தும் வண்ணம் வசைபாடிய ஸ்டாலின் தன் தவறு உணர்ந்து தமிழ் இனத்திடம் தலைகுனிந்து மன்னிப்பு கேட்க வேண்டும்" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக நமது அம்மா நாளேடு விளாசி தள்ளியுள்ளது.