‘சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு ! ‘ - வேட்புமனு கொடுக்க வந்த இடத்தில் திமுகவினரிடையே ஏற்பட்ட 'கைகலப்பு'
வேட்மனு கொடுக்க வந்த இடத்தில் சட்டைகளை கிழித்துக் கொண்டு கைகலப்பில் ஈடுபட்ட திமுகவினர்.
தமிழகம் முழுவதும் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவை வழங்கலாம் என்று திமுக தலைமை முன்னர் அறிவித்தது. இதனையொட்டி திமுகவினர் வேட்புமனுவை கொடுத்து வர்கின்றனர்.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இருகோஷ்டிகள் சட்டையை கிழித்துக் கொண்டு கைகலப்பில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்செங்கோடு நகர திமுகவில் முன்னாள் நகர்மன்றத் தலைவராக இருப்பவர் நடேசன். திருச்செங்கோடு திமுகவில் மிகுந்த செல்வாக்கு பெற்றவர்.கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல் நகர்மன்ற தலைவராக இருக்கிறார். கடந்த தேர்தலில் திருச்செங்கோடு தலைமையில் போட்டியிட தலைமையிடம் சீட் கேட்டார். கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், இவருக்கு போட்டியிட சீட் கிடைக்கவில்லை. இவரது தலைமையில் ஒரு அணியும், தற்போதைய நகரக் கழக பொறுப்பாளர் தாண்டவன் கார்த்தி தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகின்றது.
இந்த இருகோஷ்டிகளுக்கும் இடையே நீறுபூத்த நெருப்பாக கோஷ்டி பூசல் இருந்து வந்தது. இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு வழங்குவதற்கு திருச்செங்கோட்டில் இன்று செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டம் தொடங்கிய சில நிமிடத்திலேயே ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி பேசிக் கொண்டிருந்தனர். திடீரென நகரக் கழக பொறுப்பாளர் தாண்டவன் கார்த்தி எழுந்து சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவிக்க, வாக்கு வாதம் நடந்தது. இதனை தொடர்ந்து தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இந்த தள்ளு முள்ளு பிறகு கைகலப்பாக மாற, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் திமுக தொண்டர்கள் சட்டையை கிழித்துக் கொண்டு சண்டையிட்டு கொண்டனர். இதனைத் தொடர்ந்து சுமார் அரை மணி நேரம் நடந்தது கைகலப்பு. சிறிது நேரத்தில் அந்த இடமே போர்க்களமாக மாறியது. வேட்புமனு வழங்க மாவட்ட திமுக கழகத்தால் நியமிக்கப்பட்ட திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் தங்கவேல், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜிஜேந்திரன் மற்றும் எலச்சிபாளையம் ஒன்றியக் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டதன் பேரில் அமைதியாக கலைந்து சென்றனர் திருச்செங்கோடு திமுகவினர்.