திருச்சியைச் சேர்ந்தவர் வினோத். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்டு கணிசமான அளவில் வாக்குகளை பெற்றிருந்தார்.  நேற்று புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கீரனார் அருகே இருக்கும் சுங்கச்சாவடி வழியாக தனது வாகனத்தில் வந்திருக்கிறார். அப்போது அவர் பணம் செலுத்த மறுத்ததாக தெரிகிறது. இதனால் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் வினோத்திற்கு இடையே வாக்குவாதம் நடந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி அங்கிருந்தர்வர்கள் வினோத்தை சரமாரியாக தாக்கி இருக்கிறார்கள். 

இதில் அவர் பலத்த காயமடைந்து இருக்கிறார். அவருடன் வந்தவர்கள், வினோத்தை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மாத்தூர் காவல் நிலையத்தில் வினோத் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதுகாப்புக்காக காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

சுங்கச்சாவடியில் பணம் பெறுவதை அரசு நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று நாம் தமிழர் கட்சி எதிர்த்து வருகிறது. இதனால் அக்கட்சியினர் பெரும்பாலும் சுங்கச்சாவடியில் பணம் செலுத்தாமல் செல்கின்றனர். இதன்காரணமாக பல இடங்களில் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் தகராறு நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.