மலைமுழுங்கி டைனோசர்களின் அட்டூழியத்தை கண்டுகொள்ளமல் விட்டு, அப்புராணி மண்புழு மீது சர்வாதிகாரம் செலுத்தினால் எப்படியிருக்கும்? அப்படியான மிக கேவலமான செயலாகத்தான் விமர்சிக்கப்படுகிறது நல்லகண்ணு மற்றும் கக்கன் குடும்பத்தினரை வீட்டு வசதி வாரிய வீட்டை காலி பண்ணச் சொல்லி எடப்பாடியார் அரசு போட்ட உத்தரவு. 

சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், சீனியர் காம்ரேடான நல்லகண்ணுவுக்கு கடந்த 2007-ம் ஆண்டு வீடு ஒதுக்கீடு செய்திருந்தது தமிழக அரசு. மாத வாடகை கொடுத்து குடியிருந்து வந்தார். நெடுங்காலம் அரசியலில் இருந்தாலும் கூட அதை வைத்து ஐந்து பைசா சம்பாதிக்காத, இன்றும் நேர்மை அரசியலுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஆச்சரியம் இவர். இதேபோல், காமராஜர் ஆட்சியின் போது அமைச்சராக இருந்தவர் கக்கன். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இவரும் மிக மிக கைசுத்தமான அரசியல்வாதியாக இருந்தார். வெறும் கவுன்சிலர் பதவி கிடைத்தாலும் கூட அதை வைத்து கோடிகள் சம்பாதிக்கும் உலகம் இது. 

ஆனால் அந்த காலத்தில் அமைச்சர் பதவியில் இருந்தும் கூட முறையான வருமானத்தை மீறி நயா பைசா கூட சேக்காதவர். மதுரை - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு குக்கிராமம்தான் இவரது சொந்த ஊர். இவரது வாரிசுக்கும் இதேபோல் வீட்டு வசதி வாரியத்தில் மாத வாடகைக்கு வீடு ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரையும் அவரவர் வீடுகளை காலி செய்திட சொல்லி சமீபத்தில் தமிழக அரசு நோட்டீஸ் வழங்கிவிட்டது. இதைத்தொடர்ந்து நல்லகண்ணு எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் தன் வீட்டை காலி செய்துவிட்டு கே.கே.நகரில் ஒரு வாடகை வீட்டில் குடியேறிவிட்டார்.  

சம்பந்தப்பட்டவர்கள் இது குறித்து சப்தமிடவில்லைதான். ஆனால் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் இந்த விவகாரத்தை கையிலெடுத்து வைத்து ஆளுங்கட்சியை வெளுத்தெடுத்துவிட்டனர். அதிலும் சமூக வலை தளங்களிலும் விமர்சனங்கள் அமில மழையை பொழிந்துவிட்டன அரசின் மீது. ”அரசு அதிகாரிகளும், ஆளுங்கட்சி புள்ளிகளும் ஏன் எதிர்கட்சி நபர்களும் கூட அரசாங்கத்தின் சொத்துக்களை கபளீகரம் செய்து அனுபவித்துக் கொண்டுள்ளனர். சாதாரணமாக ஒரு இன்ஸ்பெக்டருக்கு வழங்கப்பட்டுள்ள அரசு ஜீப்பை அவரது  மனைவி மார்க்கெட் போகவும், குழந்தைகள் ஸ்கூலுக்கு போகவும், உறவினர்கள் வந்தால் தியேட்டரில் இறக்கிவிடவும், பெத்தவங்களை ஹாஸ்பிடலில் இறக்கிவிடவும் பயன்படுத்துகிறார். இதில் ஆரம்பித்து அத்தனை துறை அதிகாரிகள் அரசுப்பணத்தில் மஞ்சள் குழிப்பதை யோசித்துப் பாருங்க.

 

ஆளுங்கட்சிப் பேர்வழிகள் அரசு சொத்தை அனுபவிப்பதும், ஆட்டய போடுவதும் கொஞ்ச நஞ்சமா? இதையெல்லாம் தட்டிக் கேட்க அரசாங்கத்துக்கு யோக்கியதை இல்லை. ஆனால் அப்பாவி அரசியல் தலைவர்களையும், அவர்களின் குடும்பத்தையும் சித்ரவதை செய்வது அசிங்க அரசியல். அரசியலில் நேர்மையானவர்களும் உண்டு! என்பதை நிரூபிப்பதற்கான ஒரே கையிருப்பு நல்லகண்ணு மட்டுமே. அவர் மீது நடந்திருக்கும் இந்த சர்வாதிகார தாக்குதலால் விளைந்த சாபம் உங்களை சும்மாவிடாது முதல்வர், துணை முதல்வரே. எதிர்ப்பு வலுத்ததும், துணைமுதல்வர் இறங்கிவந்து ‘பொது ஒதுக்கீட்டில் நல்ல கண்ணுவுக்கும், கக்கன் குடும்பத்துக்கும் மாத வாடகைக்கு வீட்டு வசதிவாரிய குடியிருப்பு வீடு ஒதுக்கப்படும்.’ அப்படின்னு சொல்லியிருக்கார். 

இந்த சலுகையை, சமாதானத்தை நல்லகண்ணு அவர்கள் ஏற்கவே கூடாது.  எடப்பாடியார் அரசு தரும் அந்த வீட்டு சாவியை தூக்கி எறிய வேண்டும் நீங்கள். உங்களின் வாடகை வீட்டின் மாத வாடகையை நாங்கள் தருகிறோம். வாய்ப்பிருந்தால் உங்களுக்கு ஒரு வீடே கட்டித்தருகிறோம் நாங்கள். ஆனால் நிச்சயமாக அரசு வீட்டை இனி நீங்கள் ஏற்கக்கூடாது.” என்று பொங்கியுள்ளனர் பொதுமக்கள் இணையத்தில். என்ன செய்யப்போகிறார் நல்லகண்ணு?