Nallakannu meet karunanidhi

திமுக தலைவர் கருணாநிதியை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.அவருடன் மாநில செயலாளர் முத்தரசனும் சென்றிரந்தார்.

உடல்நலக்குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி கடந்த பல மாதங்களாக கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். அவரை அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

கடந்த வாரம் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவரை டெல்லி வந்து தனது இல்லத்தில் ஓய்வெடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னை, கோபாலபுரம் இல்லத்துக்கு நேற்று இரவு நல்லகண்ணு சென்றார். அவருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனும் சென்றார். இருவரையும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்று அழைத்துச் சென்றார்.

இதையடுத்து அவர்கள் இருவரும் கருணாநிதியிடம் நலம் விசாரித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய
நல்லகண்ணு , காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரிக்க முடியவில்லை என்றும் இதனால் . இப்போது அவரைச் சந்தித்தேன் என தெரிவித்தார்.

அவர் என்னை அறிந்துகொண்டு என்னைப் பார்த்து புன்னகைத்தார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அவர் குணமடைந்து அரசியல் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் நல்லகண்ணு நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.