பாஜகவில் சேர சசிகலாவுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்திருந்த நிலையில் பாஜவில் சேரப்போகிறேனா என்பது குறுத்து வி.கே. சசிகலா கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுகவை மீட்பேன், அதிமுக நான் வழி நடத்துவேன் என்று பேசி வரும் சசிகலா, ஒவ்வொரு ஊராக சென்று வருகிறார். இந்நிலையில் கடலூர் வந்த சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக அரசு தற்போது திராவிட மாடல் என்று பேசி வருகிறது. ஆனால், அதிமுக ஏற்கனவே திராவிட மாடலை உருவாக்கி சமூக நீதியை செயல்படுத்தி வந்தது. அதிமுக ஆட்சிகாலத்தில்தான் பெண்களுக்காக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அவர்களுக்காகப் பல திட்டங்களை சமுக நீதியோடு அதிமுக செயல்படுத்தியது. ஆனால், தற்போதைய திமுக அரசு சமூக நீதிக்கான அரசு என்றும் திராவிட மாடல் என்றும் பேசி வருகிறது. 

பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட திட்டங்களை ரத்து செய்ததுதான் உங்களுடைய திராவிட மாடலா? பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பாஜகவுக்கு வர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தது அவருடைய தனிப்பட்ட கருத்து. அவருடைய கட்சிக்கு நான் வர வேண்டும் என அவருடைய ஆசையை தெரிவிக்கிறார். இதி வேறு ஒன்றும் இல்லை. உண்மையில் நான்தான் எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். இந்தக் கிராமத்தில் நீரோடையில் உயிரிழந்த சிறுமிகள், கிராமத்தில் கழிப்பறை வசதி இல்லாததால் இந்தப் பகுதிக்கு சென்று அங்கு குளித்ததால் உயிரிழந்திருக்கிறார்கள். எனவே, இந்தக் கிராமம் முழுவதும் கழிப்பறை வசதி உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும். அரசு அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

செவிலியர்களைத் தேவைக்கு ஏற்ப வேலை வாங்கி விட்டு தற்போது பணி நிரந்தரம் வழங்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. அவர்களுக்கு நிரந்தரப் பணி வழங்க வேண்டியது அரசின் கடமை ஆகும். சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் விவகாரத்தில் அரசு தலையிடக் கூடாது. கோயிலில் அரசு தலையிடுவது நல்லது அல்ல. நீதிமன்ற உத்தரவுப்படி தீட்சிதர்களிடமே கோயில் நிர்வாகம் இருக்க வேண்டும்” என்று சசிகலா தெரிவித்தார். “சசிகலாவை அதிமுகவில் சேர்த்தால் கட்சி வளரும். இல்லையென்றால் சசிகலா பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார். இ ந் நிலையில் சசிகலா இவ்வாறு பதில் கூறியுள்ளார்.