nagma condemns modi in pak attack

பாகிஸ்தான் அத்துமீறலுக்கு இந்திய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு வளையல்கள் அனுப்பப்படும் எனவும் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நடிகையுமான நக்மா தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணகாதி எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது ராக்கெட்டுகளை வீசியும் தானியங்கி துப்பாக்கிகளால் சுட்டும் பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்திய பகுதிக்குள் சுமார் 250 மீட்டர் தூரம் வரை உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில், இந்திய ராணுவ இளநிலை அதிகாரி பரம்ஜீத் சிங், எல்லை பாதுகாப்பு படையின் தலைமை காவலர் பிரேம் சிங் ஆகியோர் உயிரிழந்தனர்.

அவர்களின் உடல்களை கைப்பற்றிய பாகிஸ்தான் ராணுவத்தினர் இருவரின் தலையை துண்டித்ததுடன், உடல்களை சிதைத்துள்ளனர்.

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அராஜக போக்கிற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நடிகையுமான நக்மா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது :

பாகிஸ்தான் அத்துமீறலுக்கு இந்தியா நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய அரசு கண்டும் காணாததுபோல் செயல்படுகிறது.

ராணுவத்திற்கான நிதி அதிகரிக்கப்பட்டும் பயனில்லை. கருப்பு பணத்தை மீட்பேன் என்று கூறிவிட்டு அதையும் மீட்கவில்லை.

மின்னணு இயந்திரத்திற்கு பதிலாக வாக்கு சீட்டு முறையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

பாகிஸ்தான் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து பிரதமர் மோடிக்கு வளையல்கள் அனுப்பப்படும்.

பெண்கள் செல்போன் பேசக்கூடாது என்ற பா.ஜ.வினர் கருத்து கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.