சீனாவில்  நாய்க்கறி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்தியாவின் வடகிழக்கு  மாநிலங்களில்  ஒன்றான நாகலாந்திலும் அம்மாநில அரசு நாய் இறைச்சிக்கு தடை விதித்துள்ளது. விலங்குநல உரிமை ஆர்வலர்கள் நீண்ட நாட்களாக இதற்காக போராடி வந்த நிலையில் அம்மாநில அரசு இந்த தடையை விதித்துள்ளது. உலக அளவில் சீனா, தென்கொரியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் நாய் இறைச்சி சாப்பிடுவது அம்மக்களின் பாரம்பரியமாக இருந்து வருகிறது. அதை சுவை மிகுந்த உணவாகவும் அவர்கள் கருதுகின்றனர். முன்னதாக  சீனாவின் ஈரமான வுஹான் சந்தையில் இருந்து வைரஸ் பரவியது என சந்தேகிக்கப்படும் நிலையில், அங்கு நாய், பூனை,பாங்கோலின், வௌவால், உள்ளிட்ட சில அருவெறுப்பு மிக்க  காட்டு விலங்குகளை சந்தைகளில் விற்பனை செய்வதற்கும், உண்பதற்கும், வேட்டையாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்தியாவில் உள்ள வட கிழக்கு மாகாணங்களில் ஒன்றான நாகாலாந்தில் நாய் இறைச்சியை சாப்பிடுவது வழக்கத்தில் இருந்து வருகிறது. 

உலகம் முழுவதும் நாய், பூனை, உள்ளிட்ட விலங்குகளை சாப்பிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்  என விலங்குநல அமைப்புகளால்  பல ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல், அருவெறுப்பு மற்றும் ஆபத்து மிக்க காட்டு விலங்குகளை வேட்டையாடுவதையும், அதை இறைச்சிக்காக விற்பனை செய்வதையும் தடுக்க வேண்டும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.இந்நிலையில் நாகலாந்து அரசு அம்மாநிலத்தில் நாய் இறைச்சி சாப்பிட, விற்பனை செய்ய அதிரடியாக தடை விதித்துள்ளது. ஆண்டொன்றுக்கு சுமார் 30 ஆயிரம் நாய்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து நாகலாந்துக்கு இறைச்சிக்காக கடத்தப்பட்டு வந்துள்ளது. அது அங்கு நேரடி சந்தைகளில் விற்கப்பட்டு, அவைகள் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்படுவதுடன் அதன் இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. நாகலாந்தில் உள்ள ஈரமான  சந்தையில் சாக்குமூட்டையில் கட்டப்பட்ட  நாய்களின் படம் சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து  பல்வேறு விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்கள் இந்தியா போன்ற நாடுகளில் இதை தடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். 

எனவே இதுவரை இந்தியாவில் நாய்களுக்கு நடந்துவந்த கொடுமையை முடிவுக்குக்  கொண்டுவரும் வகையில் நாகலாந்து மாநில அரசு நாய் விற்பனை மற்றும் அதை இறைச்சிக்காக கொள்ள தடைவிதித்துள்ளது. இதை பல அமைப்புகள் வரவேற்று இருந்தாலும்,  சில சிவில் சமூக குழுக்கள் இந்த தடையை கடுமையாக எதிர்த்துள்ளனர். இது மாநிலத்தின் உணவு பழக்கவழக்கங்கள் மீதான தாக்குதல் என்றும், தங்கள் பாரம்பரிய உணவுக்கு எதிரான தடை என்றும் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் நாய்கள் மற்றும் நாய் சந்தைகளில் வணிக இறக்குமதி மற்றும் வர்த்தகத்தை முற்றிலுமாக தடை செய்வதாக,  மாநில அரசு அறிவித்துள்ளது மேலும் சமைத்த மற்றும் சமைக்காத நாய் இறைச்சி விற்பனையையும் தடை செய்துள்ளது. மாநில அரசு எடுத்துள்ள புத்திசாலித்தனமான இந்த முடிவை பாராட்டுங்கள் என்று நாகலாந்தின் தலைமைச் செயலாளர் டெம் ஜோன் டாய் வெள்ளிக்கிழமை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

இந்தியாவில் இறைச்சி வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக பல ஆண்டுகளாகப் பிரச்சாரம் செய்த ஹுமன் சொசைட்டி ஆப் இன்டர்நேஷனல் அமைப்பு, நாகலாந்து அரசின் முடிவை வரவேற்றுள்ளது. நாகலாந்தில் நாய்களின் துன்பம் நீண்டகாலமாக இந்தியா மீது இருள் சூழ்நிலையை ஏற்படுத்தியது, இந்நிலையில்  மாநில அரசின் முடிவு நாய் இறைச்சி வர்த்தகத்தின் கொடுமையை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பது வரவேற்புக்குரியது என்னா வரவேற்றுள்ளது. அதேபோல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிசோரம் மாநிலம், நாய்களின் விற்பனையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முதற்படியை எடுத்துள்ளது. அதாவது இறைச்சிக்காக கொல்லப்படும் விலங்குகளின் பட்டியலில் இருந்து, அவற்றை அகற்றுவதற்கான சட்டத்திருத்தத்தை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.