உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை ஓரமா போயி விளையாடுங்க.. குறுக்க வராதிங்கப்பா.! கலாய்த்த சீமான்
இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தான் வெல்லும் என்று கூறுகிறார்கள். காசு கொடுக்காமல் என்னை உங்களால் வீழ்த்த முடியுமா ? என்று பேசியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் நாளை நடக்க உள்ளது. காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகாவும் போட்டியிடுகிறார்கள்.
நேற்று நடந்த இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் சீமான் பேசினார். அப்போது பேசிய அவர், தமிழர் வாழாத நாடில்லை. ஆனால் தமிழர்கள் வாழ உள்ளங்கை அளவு கூட ஒரு நாடு இல்லை. நம்முடைய இனத்திற்காக ஒரு நாடு வேண்டும் என்று போராடியவர் பிரபாகரன்.
என் மொழி, இனம் வாழ வேண்டும் என்றால் என் தமிழை நேசிக்கிற ஒரு தமிழன் தான் இந்த நாட்டை ஆள வேண்டும். இந்த நோக்கம் இந்த மண்ணில் பிறந்தவர்களுக்கு தான் வரும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1, 000 கொடுப்போம் என்று கூறினார்கள். அதை நிறைவேற்றினார்களா? கொடநாடு கொலை பற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம் என்றார்கள்.
எடுத்தார்களா? தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்தியவர் யார்? என்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம் என்றார்கள். எடுத்தார்களா? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், இப்போது இருக்கும் பிரச்சனையில் உதயநிதி, அண்ணாமலை எல்லாம் ஓரமா போய் விளையாடுங்க என்று கிண்டலாக பேசினார்.
இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தான் வெல்லும் என்று கூறுகிறார்கள். காசு கொடுக்காமல் என்னை உங்களால் வீழ்த்த முடியுமா ? சுகாதாரமான குடிநீர் தருகிறோம், அனைவருக்கும் இலவச கல்வி தருகிறோம், அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கொடுக்கிறோம் என்று கூறி வாக்குகள் சேகரிக்கிறோம். வாக்காளர்களும் எங்களுக்கு வாக்களிக்கிறார்கள். ஆனால் நீங்கள் பணத்தை மட்டுமே நம்பி தேர்தலில் நிற்கிறீர்கள்.
இதையும் படிங்க..Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெல்லப்போவது எந்த கட்சி.? வெளியானது பரபர சர்வே முடிவுகள்
மக்களின் வழக்கு எவ்வளவு ஆண்டுகள் நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் அரசியல் வழக்கு உடனுக்குடன் தீர்ப்பு சொல்லப்படுகிறது. கோர்ட்டுகள் எல்லாம் இன்று கட்சிகளின் தலைமை அலுவலகங்களாக செயல்பட்டு வருகிறது. இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றார்கள். ஆனால் இந்திக்காரர்கள் இன்று இங்கு வந்து வேலை பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
விடுமுறையே இல்லாத ஒரு துறை தான் காவல்துறை. எனக்கு பாதுகாப்பு தர வேண்டாம். என்னை பாதுகாக்க என் தம்பி, தங்கைகள் உள்ளனர். இன வெறி இருக்க வேண்டும். தமிழ் தேசிய இன மக்களை பாதுகாக்க. எனவே நீங்கள் அனைவரும் நம்முடைய வேட்பாளர் மேனகாவுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்து அவரை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்ய வேண்டும் என்று பேசினார் சீமான்.
இதையும் படிங்க..ஸ்மார்ட் வாட்ச் முதல் குத்து விளக்கு வரை.. வீடு தேடி வரும் பரிசுகள்! ஈரோடு கிழக்கு தொகுதி பரிசு பொருள் லிஸ்ட்!