நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகரும், சட்டமன்ற தேர்தல் வேட்பாளருமான நகை கடை அதிபரின் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

2016-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர் நகைகடை அதிபர் வண்டாரி தமிழ்மணி. நாம் தமிழர் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். இவர் சீமானின் தீவிர ஆதரவாளர் மற்றும் தன் கையில் சீமான் பெயரை பச்சை குத்தியிருக்கிறார். இவரது மனைவி ஜான்சிராணி. இவர்களுக்கு இன்பதமிழன், தமிழ்நிலா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது.  

இந்நிலையில் சமீபத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக இருவருமே மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளனர். மன அழுத்தத்தில் இருந்த ஜான்சிராணி சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே மீட்டு ஜான்சிராணியை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்  ஜான்சிராணி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதனிடையே, கட்சி கட்சி என்று வண்டாரி தமிழ்மணி இருந்தபடியால் கடையை சரிவர நடத்தாமல், தன் சொந்த செலவில் மீட்டிங், தெருகூட்டம் என்று இருந்ததால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அப்போது, கொடுத்த கடனை நாம் தமிழர் கட்சியில் மாநில இளைஞர் அணி பொறுப்பாளர் துரைமுருகனிடம் கேட்ட போது அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. துரைமுருகனுக்கு ஆதரவாக சீமானும் ஆவேசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதை தமிழ்மணி தன் மனைவியிடம் சொல்ல மனமுடைந்த ஜான்சிராணி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.