நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய ராஜூவ்காந்தி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் ராஜீவ் காந்தி. ஊடகங்களில் நாம் தமிழர் கட்சியின் பிரதிநிதியாக பங்கேற்றவர். அண்மையில் நாம் தமிழர் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது, பேராசிரியர் கல்யாணசுந்தரம், ராஜீவ்காந்தி மீது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நம்பிக்கை இன்மையை வெளிப்படுத்தி இருந்தார். இதனையடுத்து, கல்யாணசுந்தரம், ராஜீவ்காந்தி அடுத்தடுத்து விலகினர். 

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய ராஜீவ் காந்தி அவ்வப்போது அளித்த பேட்டியில் நாம் தமிழர் கட்சி குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய ராஜீவ்காந்தி வேறு ஒரு அரசியல் கட்சியில் சேர இருப்பதாகவும் இது குறித்த ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய ராஜீவ்காந்தி திமுகவில் இணைய இருப்பதாகவும் நாளை அவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.