வேலூர் யாருக்கு என திராவிட கட்சிகளான திமுகவும் - அதிமுகவும் மல்லுக்கட்டிக் கொண்டிக்கின்றன. பணபலத்திலும், தொண்டர்கள் பலத்திலும் இருகட்சிகளும் சமமாக களமாடி வருகின்றன.

 

கடந்த முறை நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிட்ட கமல் ஹாசனின் மக்கள் நீதி மைய்யம் கட்சியும், டி.டி.வி.தினகரனின் அமமுகவும் இம்முறை வேலூரில் களத்தில் இறங்கவில்லை. கமல்ஹாசனின்  கட்சி தமிழகம் முழுவது 4 சதவிகித வாக்குக்களை பெற்றது. அமமுக 3.5 சதவிகித வாக்குகளை பெற்றது. நாம் தமிழர் கட்சி பல தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்றது. அதிகபட்சமாக கன்னியாகுமரி தொகுதியில் ஹெச். மஹேந்திரன் 84 ஆயிரத்து 855 வாக்குகளை பெற்றார். தமிழகம் முழுவதும் 3.909 வாக்கு சதவிகிதத்தை பிடித்தது நாம் தமிழர் கட்சி. 

இந்த நிலையில் செல்வாக்கு மிகுந்த அதிமுகவும், திமுகவும் பணத்தை தண்ணீராய் செலவழித்து வாக்காளர்களை கவர்ந்து வருகின்றன. இதற்காக வெளியூரில் இருந்து இரு கட்சிகளும் பிரச்சாரத்திற்காக தொண்டர்களை பணத்தை செலவழித்து வேலூரில் குவித்து வருகின்றனர். ஆனால் நாம் தமிழர் கட்சிகாக பல்வேறு ஊர்களில் இருந்து சொந்த பணத்தை செலவழித்து தன்னெழுச்சியாக இளைஞர் படை வேலூரில் திரண்டு வந்து குவிந்து தேர்தல் பணிகளில் குதித்துள்ளன. 

இந்நிலையில், அமமுக, மக்கள் நீதி மைய்யம் கட்சிகள் தேர்தலை தவிர்த்ததால் அந்தக் கட்சியினரின் வாக்குகளையும் நாம் தமிழர் வேட்பாளர் தீபலட்சுமிக்கு கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளது. ஏ.சி.சண்முகத்துக்கும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்கும் இடையே கடுமையான போட்டி நிலவினாலும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளர் அவர்களுக்கு டஃப் கொடுப்பது உறுதி என்கிறார்கள்.