கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.

அதிமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்ட துணை முதலமைச்சர் ஓபிஎஸ்ன் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றி பெற்றார். ஓபிஎஸ் தனது மகனுக்காக சிறப்பு கவனம் செலுத்தி பணியாற்றி வெற்றி பெற வைத்தார் என்றும் மற்ற இடங்களில் அவர் கவனம் செலுத்த வில்லை என அதிமுகவில் ஒரு குற்றச்சாட்டு இன்று வரை  இருந்து வருகிறது.

மேலும் அதிமுகவில் ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி என்று வந்த போது ஓபிஎஸ்ஸிற்கு ஆதரவாக வந்தவர்களுக்கு தேர்தலில் சீட் வாங்கி கொடுக்கவில்லை மற்றும் கட்சியில் முக்கிய பதவிகளையும் வாங்கிக் கொடுக்கவில்லை  என்ற அதிருப்தியும் அதிமுகவில் இருந்து வருகிறது. 

இந்நிலையில் தான் மூன்று முறை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் எம்.பி.யாக நியமிக்கப்பட்ட மைத்ரேயன், தனக்கு மீண்டும் சிட் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் முகமது ஜான் மற்றும் சந்திரசேகர் ஆகியோருக்கு எம்.பி.பதவிகள் ஒதுக்கப்பட்டன.

இதையடுத்து கடும் அதிருப்தி இடைந்த மைத்ரேயன் தனது ஆதங்கத்தை செய்தியாளர்களிடம் கொட்டித் தீர்த்தார். இந்நிலையில்தான் புதுத் தகவல் ஒன்று ஒன்று தற்போது வெளிவந்திருக்கிறது.

அதாவது மைத்ரேயனுக்கோ அல்லது கட்சியில் இருக்கும் சீனியர்களுக்கோ மாநிலங்களவை  எம்.பி பதவி வழங்கப்பட்டால்  அது தனது மகன் ரவீந்திரநாத் குமாரின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்று ஓபிஎஸ் நினைத்ததுதான் காரணம் என கூறப்படுகிறது. இது அதிமுகவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.