மறைமுக தேர்தலில் ஒரு சில இடங்களில் பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில், கோவையில் அதிமுக உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது

எஸ்பி வேலுமணியின் கோட்டையாக இருந்த கோவை மாநகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. மாநகராட்சியை மட்டுமில்லாமல் கோவையில் உள்ள பேரூராட்சி மற்றும் நகராட்சிகளையும் கைப்பற்றி மிகப்பெரிய அளவிலான வெற்றியை பெற்றது திமுக. கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் அனைத்து தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியிருந்தநிலையில் 9 மாதங்களில் அனைத்துமே தலைகீழாக மாறிவிட்டது. இதனால் முன்னாள் அமைச்சர் வேலுமணி அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து கோவை மாவட்டத்தில் ஒரு பேரூராட்சியையாவது அதிமுக கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கும் அதிமுகவிற்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், அதிமுக 8 வார்டுகளிலும், திமுக 6 வார்டுகளிலும், சுயேட்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றனர். இதனால் இரண்டாவது முறையாக வெள்ளலூர் பேரூராட்சியை அதிமுக தக்க வைத்தது. மாவட்டம் முழுவதும் திமுக அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில், இப்பேரூராட்சியையும் கைப்பற்ற திமுக முடிவு செய்ததாக கூறப்படுகிறது.. 

இதனால் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் நேற்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். இன்று பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து, அதிமுக உறுப்பினர்கள் கார் மூலம் வெள்ளலூர் வந்து கொண்டிருந்தனர். அப்போது வெள்ளலூர் அருகே 3 கார்களில் வந்த மர்ம நபர்கள் உறுப்பினர்கள் வந்த காரை துரத்தியுள்ளனர். தொடர்ந்து உறுப்பினர்கள் வந்த கார் மீது தாக்குதலும் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் உறுப்பினர்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இருந்த போதும், குறித்த நேரத்திற்கு தேர்தல் நடக்கும் பேரூராட்சி அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் அங்கு இருந்து உறுப்பினர் கிளம்பி சென்றனர். இதனையடுத்து பேரூராட்சி அலுவலகம் சென்ற நிலையில் அங்கு சுயேட்சை மற்றும் அதிமுக உறுப்பினர்களிடம் அங்கு ஏற்கனவே காத்திருந்த திமுக உறுப்பினர்கள் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக கூறப்படும் இதனையடுத்து இரு தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பதட்டமான சூழல் காரணமாக ஏற்கனவே குவிக்கப்பட்டிருந்த போலீசார், உறுப்பினர்களை மட்டும் பேரூராட்சி அலுவலகத்திற்குள் அனுமதித்தனர். மற்றவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. 


இதனிடையே பேரூராட்சி அலுவலகத்திற்குள் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், கைகலப்பு ஏற்படும் சூழல் நிலவியதால், தேர்தல் நடத்தும் அலுவலரான செயல் அலுவலர் பாலசுப்ரமணி, சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்தார். தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் மற்றொரு தேதியில் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும் கூறினார் . இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தேர்தலை முறையாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டவர், அராஜகமாக செயல்படும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் அதிமுக உறுப்பினர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனால் கோவை மாநகரத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது