Mutharasan says Dinakaran will join CM Palanisamy
தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு சொந்த பலமும் இல்லை; மக்கள் ஆதரவும் இல்லை என்றும், பதவி கொடுத்தால் எடப்பாடி பழனிசாமியுடன் தினகரன் இணைந்து விடுவார் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய - மாநில அரசுகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்றார். மத்திய அரசின் துரோகத்துக்கு மாநில அரசு துணை போகிறது. காவிரி தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சனை. 20 மாவட்ட மக்களுக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமாக உள்ளது.
மேலாண் வாரியம் அமைக்க மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பிரதமரை சந்திக்க இதுவரை நேரம் ஒதுக்கவில்லை. அதிமுக அரசு தனியாக உண்ணாவிரதம் இருந்து தனிமை படுத்திக் கொண்டது.
மத்திய - மாநில அரசுகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் செய்யும் துரோகத்தை கண்டித்து போராட்டங்கள் தொடரும் என்றார். உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளாமல், எஸ்.டி., எஸ்.டி., சட்டப் பாதுகாப்பு நீர்த்துப்போகும் வகையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொண்டு வந்துள்ளது என்றும் மத்திய அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
பாலியல் பலாத்கார சம்பவங்கள், பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு சொந்த பலமும் இல்லை; மக்கள் ஆதரவும் இல்லை. ஆட்சி மாற வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் உள்ளது.
முதலமைச்சர் ஆற்ற வேண்டிய பணிகளை எதிர்கட்சி தலைவர் ஆற்றுகின்றார். கமல் ஹாசன் கொள்கையில் தெளிவு இல்லை. இன்னொருவர் இமயமலைக்கு சென்றுள்ளார். அங்கு சாமியார்கள் என்ன சொன்னார்கள்? என்று தெரியவில்லை.
டிடிவி தினகரனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் ஒரே கொள்கைதான். ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே தர்மயுத்தம் நடத்தினார். இதில் அவர் வெற்றி பெற்றாரா? பதவி கிடைத்ததும் எடப்பாடியுடன் சேர்ந்து விட்டார். அதேபோல தினகரனுக்கும் ஏதாவது பதவி கொடுத்தால் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து விடுவார் என்று முத்தரசன் கூறினார்.
