திருமணமான முஸ்லிம் ஆண்கள், தங்கள் மனைவியை விட்டு நிரந்தரமாக பிரிய விரும்பினால், மூன்று முறை, 'தலாக்' கூறி, விவாகரத்து செய்யும் நடைமுறை அமலில் இருந்தது. இதனால், முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுவதாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'முத்தலாக் நடைமுறை சட்ட விரோதம்' என, தீர்ப்பளித்தது.

இதையடுத்து, முத்தலாக் முறைக்கு தடை விதித்து, 2017ல், அவசர சட்டம் இயற்றப்பட்டது. அவசர சட்டத்தை, சட்டமாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட மசோதா, மக்களவையில் நிறைவேறியது; ராஜ்யசபாவில் நிறைவேறவில்லை. இதனால், அவசர சட்டம் காலாவதியானது.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், பாஜக  அபார வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைத்தது. முத்தலாக் தடை சட்ட மசோதாவை நிறைவேற்ற, மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே, கடந்த வாரம், மக்களவையில்  இந்த மசோதா நிறைவேறியது

மாநிலங்களவையில் கடும் எதிர்ப்புக்கு இடையே முத்தலாக் தடை மசோதா நேற்று முன்தினம் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 99 பேரும், எதிராக 84 பேரும் வாக்களித்தனர்.

இதையடுத்து முத்தலாக் தடைச்சட்டத்துக்கு  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசுத் தலைவர் ஒப்புதலைத் தொடர்ந்து முத்தலாக் தடைச் சட்டம் அரசாணையும் வெளியிடப்பட்டது.  இதையடுத்து இன்று முதல் முத்தலாக் தடைச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது.