கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை எதிரொலியாக பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் படிப்பு நிலுவைதேர்வுகள் (Arrear Examination) விண்ணப்பித்திருந்தாலே தேர்ச்சியளித்தது போன்று 10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்று பரவாமல் தடுத்திடும் வகையில், 10 ஆம் வகுப்பு  பொதுத்தேர்வு மற்றும் பட்டபடிப்பு முதலாண்டு, இரண்டாமாண்டு தேர்வுகளை ரத்துசெய்யப்பட்டு அனைவருக்கும் தேர்ச்சி வழங்கியது வரவேற்புக்குரியது. 

தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாகக் கல்லூரி பட்டபடிப்பு மற்றும் பொறியியல் படிப்பு  நிலுவைத்தேர்வுகளுக்கு ( ARREAR EXAMINATION) விண்ணப்பத்திருந்தாலே தேர்ச்சி வழங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருப்பதை பெருமகிழ்ச்சியோடு, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்  வரவேற்கிறது.  ஆனால் 10 ஆம் வகுப்பு தனித் தேர்வர்களை பற்றி எவ்விதமான அறிவிப்பும் இதுவரை இல்லாததால் தனித்தேர்வு மாணவர்கள் மனஉளைச்சலில் உள்ளார்கள். 

கொரோனா  தொற்று மின்னல் வேகத்தில் பரவிவருவது வேதனையளிக்கிறது. இந்நிலையில் தனித்தேர்வர்கள் தேர்வு  நடக்குமா நடக்காதா என்ற குழப்பத்தோடு உள்ளார்கள். மாணவர்களின் நலன்கருதி  கல்லூரி  அரியர் தேர்வுகளை ரத்துசெய்து அனைவருக்கும் தேர்ச்சியளித்தது போன்று தற்போது  10 ஆம் வகுப்பு தனிதேர்வர்கள் அனைவருக்கும் தேர்ச்சிவழங்க ஆவனசெய்யும்படி மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.