Muslim youth offers Rs 25000 for blackening Kamal Haasans face

கமல் முகத்தில் கரியைப் பூசுபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் இஸ்லாமிய இளைஞர் அமைப்பின் தலைவர் ஒருவர். 

ஹிந்துக்களில் தீவிரவாதிகள் உள்ளனர் என்று நடிகர் கமல்ஹாசன் கட்டுரை எழுதினாலும் எழுதினார்... அவர் மீது கண்டனங்களும் புகார்களும் குவிந்த வண்ணம் உள்ளன. தீவிர வலதுசாரி ஆதரவாளர்கள் அவர் மீது விமர்சனங்களாகக் குவித்து வர, ஹிந்துத்துவத் தலைவரான அகில பாரதீய ஹிந்து மஹாசபா தலைவர் அசோக் சர்மா, ஒருபடி மேலே போய், கமல் போன்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். மத வேற்றுமைகளை விதைக்கும் கமல் போன்றவர்கள், ஒன்று தூக்கிலிடப் பட வேண்டும் அல்லது சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்று கூறியிருந்தார் அசோக் சர்மா.

இந்நிலையில், கமல் மீது இஸ்லாமியத் தலைவர் ஒருவரும் இதே போன்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் விதத்தில் தேச விரோதக் கருத்தை கூறிவரும் கமல்ஹாசனின் எதிர்ப்பில் இப்போது அலிகாரைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் தலைவர் ஒருவரும் சேர்ந்துள்ளார். அலிகாரைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் கூட்டமைப்பின் தலைவரான மொகம்மத் ஆமிர் ரஷீத் கூறியுள்ள கருத்து, இப்போது தேசிய அளவில் விவாதப் பொருளாகியுள்ளது. அதாவது, கமல்ஹாசனின் முகத்தில் கரியைப் பூசும் இஸ்லாமிய இளைஞருக்கு ரூ.25 ஆயிரம் பரிசு கொடுக்கப்படும் என்பதுதான் அவர் அறிவித்துள்ள செய்தி.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் ஆக்ரா பதிப்புக்கு ரஷீத் கொடுத்துள்ள பேட்டியில், ஹிந்துக்கள் மட்டும் அடிப்படைவாதிகளாக மாறினால், இந்த நாட்டில் வேறு எந்த சமுதாயமும் பாதுகாப்பாக வாழ்ந்துவிட இயலாது... என்று கூறியுள்ளார். மேலும், இதுபோன்று இருவேறு சமுதாயங்களுக்கு இடையில் பிரிவினை உண்டாக்கும் விஷக் கருத்துகளைக் கூறுபவர்களின் நாக்கை அறுத்துவிட வேண்டும் என்று காட்டமாக விமர்சித்துள்ளார். 

மேலும், கமலஹாசன் அரசியலுக்கு வர விரும்பி, இதுபோன்ற துவேஷக் கருத்துகளை விதைத்து வருகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார். 

முன்னதாக கமல்ஹாசன் ஒரு வார இதழில் எழுதிய தொடர் கட்டுரையில், முன்பெல்லாம் வலதுசாரிகள் தங்கள் மீது விமர்சனம் செய்பவர்களை வன்முறையின்றி விமர்சனத்தில் ஈடுபட்டனர். இப்போது வன்முறையைக் கையிலெடுத்து தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொண்டுள்ளனர். வலதுசாரிகளிலும் இப்போது தீவிரவாதம் உள்ளது என்றவாறு கருத்து தெரிவித்திருந்தார். இவரது இந்தக் கருத்துக்கு தேசிய அளவில் பலத்த எதிர்ப்பு கிளம்பி வருகிறது.