பாபர் மசூதி-ராம ஜென்ம பூமி வழக்கில் கடந்த 9ம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்த அமர்வில் உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ். அப்துல் நசீரும் ஒருவர். அயோத்தி வழக்கில் வழக்கை விசாரித்த அமர்வு நீதிபதிகள் அனைவரும் ஒருமித்த தீர்ப்பை வழங்கினர். அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக்கள் ராமர் கோயில் கட்டி கொள்ளலாம். முஸ்லிம்கள் மசூதி கட்டி கொள்ள 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினர்.

உச்ச நீதிமன்றத்த்தின் தீர்ப்பை பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொண்டனர். இருப்பினும் ஒரு சில முஸ்லிம் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யும் எண்ணத்தில் உள்ளன. இதற்கிடையே, அயோத்தி வழக்கில் தீர்ப்பு சொன்ன உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ். அப்துல் நசீருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாப்புலர் பிரெண்ட் ஆப் இந்தியா அமைப்பிடமிருந்து கொலை மிரட்டல் வந்தது.

இதனையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ். அப்துல் நசீருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் சி.ஆர்.பி.எப். மற்றம் லோக்கல் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. அவரும் அவரது குடும்பத்தினர் பெங்களூரு, மங்கல்ளூரு மாநிலத்தில் எங்கு சென்றாலும் அவர்கள் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. இசட் பிரிவு பாதுகாப்பில் 4 முதல் 5 என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள் மற்றும் லோக்கள் போலீஸ் உள்பட மொத்தம் 22 பாதுகாப்பு வீரர்கள் பணியாற்றுவர்.