தமிழகத்தில் எங்கு கொலை, கொள்ளைகள் நடந்தாலும் தி.மு.க.வினருக்கு தொடர்பு இருக்கிறது என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி;- பொய்யான வாக்குறுதிகள் கொடுத்தும், நிறைவேற்ற முடியாத திட்டங்களை கூறியும் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றது. முதல்வர் எடப்பாடி உண்மையை கூறுகிறார். நல்லதை செய்கிறார். முதல்வர் பழனிசாமி விவசாயி. ஆனால் ஸ்டாலின் விவசாயி, நெசவாளி, தொழிலாளி என கூற முடியாது. எனவே வேலுாரில் அ.தி.மு.க., வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தங்களது தகுதியைத் தயார்படுத்தி வருகின்றனர். ஒரு சில மாணவர்கள் தற்கொலை செய்கிறார்கள். அவர்களைத் திமுக போன்ற கட்சிகள் ஊக்குவிக்கின்றன. மத்திய அரசு நீட் தேர்வை கொண்டுவந்துள்ளது. தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருந்தபோதிலும், தற்போதைய சூழ்நிலையில் நீட் தேர்வை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. அதற்கு மாணவர்களை நாம் தயார் செய்ய வேண்டுமே தவிர, அவர்களின் தற்கொலையை ஊக்குவிக்க கூடாது.  

சாவில் திமுக போன்ற கட்சிகள் அரசியல் செய்யக்கூடாது. தற்கொலை செய்பவர்களைத் தியாகிகள் ஆக்கி விடுகின்றனர். தற்கொலைக்கு திமுக கொடுக்கும் அங்கீகாரத்தால் ஏராளமான மாணவர்கள் தற்கொலையை விரும்பி செய்கின்றனர் என சர்ச்சைக்குள்ளாகும் வகையில் பேசியுள்ளார்.  

மேலும், தமிழகத்தில் எங்கு கொலை, கொள்ளை நடந்தாலும் தி.மு.க.வினருக்கு தொடர்பு இருக்கிறது. முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியை படுகொலை செய்தது தி.மு.க., பிரமுகர் மகன் தான். லீலாவதி, முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன், சாதிக்பாட்ஷா என தி.மு.க.வினரின் கொலை பட்டியலை சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் அ.தி.மு.க., ஆட்சியில் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. தினகரன் கட்சி முடிந்து விட்டது. அவருக்கு இனி அரசியலில் வேலை கிடையாது என விமர்சனம் செய்துள்ளார்.