திருவாரூரில்  சொந்த தம்பி மனைவியின் கழுத்தை அறுத்து  கொலை செய்து மூத்தனார் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.  இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் ஈ.வி.எஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி- சொர்ண பிரியா தம்பதி. இவர்களுக்கு 6 மற்றும் 4 வயதுடைய இரண்டு மகன்கள் உள்ளனர். 

இவர்கள் இருவரும் பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்தே பணிபுரிந்து வருகின்றனர். சுந்தரமூர்த்தியின் அண்ணன் ராஜகோபால் மற்றும் அவரது மனைவி ஆகியோரும் ஒரே வீட்டில் சேர்ந்து வசித்து வருகின்றனர். ராஜகோபால் திருவாரூரை அடுத்த திருக்கண்ணமங்கையில் தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். அவரது மனைவி பள்ளியின் தாளாளராக இருந்து வருகிறார். 

இந்நிலையில் நேற்று இரவு ராஜகோபால் அவரது தம்பி சுந்தரமூர்த்தியின் மனைவி சொர்ண பிரியாவுக்கும் இடையே தீடீரென தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த ராஜகோபால் சொர்ண பிரியாவின் கழுத்தை அறுத்தார். இதனையடுத்து சொர்ண பிரியாவை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர் .இருப்பினும் செல்லும் வழியிலேயே சொர்ண பிரியா உயிர் பிரிந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திருவாரூர் நகர காவல் துறையினர் ராஜகோபாலை கைது செய்து, சொத்து தகராறின் காரணமாக கொலை நடைபெற்றதா, அல்லதுகொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.