திமுக பற்றி பிதற்றினால் அரசியல் இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வரலாம் என கணக்கு போடுகிறார் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆர்.எஸ் பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று பெரம்பலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து, பாஜக தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார். முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலமாக இருந்தால், அதனை உடனே அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இதனால் திமுகவிற்கு 5 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றால் அதற்கான தொகையை பாஜக வழங்கும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

இதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்துள்ள பதில் அறிக்கையில் கூறியுள்ளதாவது:- “சொந்தத் தொகுதியில் செல்வாக்கை இழந்து திண்ணையில் அமர்ந்திருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முரசொலி பத்திரிகை அலுவலகம் “பஞ்சமி” நிலத்தில் உள்ளது என்று திரும்ப திரும்ப பொய் மூட்டையை அவிழ்த்து விட்டுக் கொண்டிருப்பதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடாளுமன்றத்திற்கே போகக்கூடாது என்று கன்னியாகுமரி மக்களால் நிராகரித்து தூக்கியெறியப்பட்ட பொன். ராதாகிருஷ்ணன் கற்பனையான பஞ்சமி நிலக் குற்றச்சாட்டை வைப்பது வெட்கக்கேடானது. முரசொலி அலுவலக விவகாரம் குறித்து எங்கள் கழக தலைவர் ஏற்கனவே உரிய இடத்தில் ஆதாரங்களை காட்டத் தயார் என்று உரிய விளக்கத்தை கொடுத்து விட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சியும், தங்கள் சொந்த அரிப்புகளை சொரிந்து கொள்வதற்காகவும் குற்றம்சாட்டுபவர்கள் தங்களிடம் ஆதாரங்கள் இருந்தால் கொடுக்கலாம் என்றும் கூறிவிட்டார். தூங்குபவர்களை எழுப்ப முடியும். தூங்குவது போல் நடிப்பவர்களை தட்டினாலும் எழுப்ப முடியாது என்பதற்கிணங்க - ஓய்வு அரசியலில் ஒய்யாரமாக இருக்கும் பொன். ராதாகிருஷ்ணன் துணிச்சல் இருந்தால் ஆதாரங்களை வெளியிட வேண்டும். அதற்கு வக்கில்லை என்றால் வேறு வழிகளில் தனது கட்சிக்குள் விரும்பும் தலைவர் பதவியை பெற முயற்சிக்க வேண்டும் என்றார். 

மேலும், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நான் விடுக்கும் ஒரேயொரு அறைகூவல் இதுதான். ஊழல் அதிமுகவுடன் இருக்கும் பழக்க தோஷத்தால் 'பொய்களை உண்மைகளாக்க' புலம்புவதை நிறுத்திக் கொள்ளுங்கள். முடிந்தால் பஞ்சமி நிலம் குறித்த ஆதாரத்தை வெளியிடுங்கள். அதற்கு நாம் லாயக்குப்பட மாட்டோம் என்று நீங்கள் கருதினால், தேர்தல் வெற்றியில் கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி - அரசியலிலும் ஓய்வு எடுங்கள். அதை விடுத்து வீணாக திமுக பற்றி பிதற்றினால் அரசியல் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்து விடலாம் என்று கணக்குப் போட்டு - தி.மு.க.வை வீண் வம்புக்கு இழுக்காதீர்கள் என ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.