முரசொலி நிலத்தை பஞ்சமி நிலம் என்று அவதூறு செய்தி பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் ஆஜராக நீதிமன்றம் அதிரடியாக சம்மன் அனுப்பியுள்ளது. 

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் அசுரன் திரைப்படம் வெளியாகியது. இந்த திரைப்படத்தின் கதை பஞ்சமி நிலம் தொடர்பாக எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திரைப்படத்தை பார்த்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இது படம் அல்ல பாடம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில், திரைப்படம் குறித்து பதிவிட்டிருந்தார். இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்று அவதூறு கருத்து கூறி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். 

இதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து முரசொலி அலுவலகம் தொடர்பாக கருத்துகளை தெரிவித்து வந்தார். இதற்கு ஆதரவாக பாஜக நிர்வாகி சீனிவாசன் தேசிய பட்டியலின ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. 

இந்நிலையில், முரசொலி அலுவலக இடம் குறித்து அவதூறு பரப்பி வரும் ராமதாஸ் மற்றும் பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் எவ்வித பதிலும் தெரிவிக்காததால் முரசொலி அறக்கட்டளை சார்பில் அதன் உறுப்பினரும் திமுக எம்.பி.யுமான ஆர்.எஸ் பாரதி சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் மற்றும் சீனிவாசன் இருவர் மீதும் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராமதாஸ் மற்றும் சீனிவாசன் இருவரும் வரும் மார்ச் 20-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.